Monday, May 28, 2012

இதழ் தொகுப்பு: கனவு (1987-2007)



சங்க இலக்கியம் முதல் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு கூறாக இடம்பெறும் தொகுப்பு மரபானது பல்வேறு நிலைகளில் செயல்பட்டு கொண்டுவருகிறது. இதன் நீட்சியாகத் தான் இதழ்களின் தொகுப்பு மரபும் உள்வாங்கப்படுகிறது.  இருபதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற சிறுபத்திரிக்கை ஊடகம் இலக்கியப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு சிந்தனைக் களங்களை அறிமுகம் செய்வது என்று தொடர்ச்சியாகத் தொழிற்பட்டு வருகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் பங்களிப்பையும் அறிய அவற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக இதழ்களைத் தொகுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நூல் தொகுப்பு வரலாற்றில் சிறுபத்திரிக்கைகளின் தொகுப்பு வரலாறு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்தொகுப்புகளின் தேவை சிறுபத்திரிக்கைகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் விளைவால் தோன்றியதாக அவதானிக்க இடமுள்ளது. ஆனால் இத்தகு முயற்சிகள் தமிழ் சிறுபத்திரிக்கை மரபில் எவ்வாறான பதிவை ஏற்படுத்தியுள்ளது என்பதும் இதழ்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இத்தொகுப்பு மரபின் செயல்பாடானது எத்தகைய நிலைபாட்டில் உள்ளது என்பதும் ஆராய்வதற்குரிய களமாக விளங்குகின்றது. இக்களத்தில் கனவு இதழின் தொகுப்பு முறைமை குறித்தும், அதன் செயற்பாடுகள் குறித்தும் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரையின் மையம் விளங்குகிறது.
இதழியல் வரலாற்றை ஆவணப்படுத்தும் தேவை, அது ஆவணப்படுத்தப்பட்ட காலச்சூழல் அதன் பின்புலத்தில் எழுந்த சிறுபத்திரிக்கை வரலாறு முதலியவை குறித்த ஒருங்கிணைந்த பார்வையுடன் இதழ் தொகுப்பிற்கான காரணத்தை அதன் பின்புலத்தோடு விளக்கும் பழ.அதியமான்,
இதழியல் வரலாற்றை ஆவணப்படுத்தும் சில முயற்சிகள் தமிழிலக்கிய உலகில் 1960, 70களில் தொடக்கம் பெற்றன. வ.ரா. நடத்திய மணிக்கொடியில் பணியாற்றியவரும் இரண்டாம் கட்டத்தில் அதை நடத்தியவருமான பி.எஸ்.ராமையா இத்தகைய ஆவண முயற்சியைத் தொடங்கி வைத்தார். அவரது ஆவணம் மணிக்கொடி காலம் வரலாற்றின் இழையும் படைப்பின் ருசியும் கொண்ட அந்நூலின் வெற்றியைத் தொடர்ந்து சரஸ்வதி, தீபம் ஆகியவற்றின் வரலாறுகளை, படைப்பாளர்கள் என்ற முறையில் அவ்விதழ்களோடு தொடர்புகொண்டிருந்த வல்லிக்கண்ணன் எழுதினார். நவீனத் தமிழில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பதிவுசெய்வது, அதன் தொடர்ச்சியைத் தக்கவைப்பது, அதன் ஊடாகச் சில விருப்பங்களை நிறைவுசெய்து கொள்வது போன்ற நோக்கங்கள் இவற்றுக்குப் பின்னால் செயல்பட்டன (பழ.அதியமான், ‘இதழ் தொகுப்பு: தூக்க நினைத்த கோவர்த்தன கிரி’, தமிழ் நூல் தொகுப்பு வரலாறு, ப.129).
என்ற கருத்துநிலைப்பாடுடன் தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கனவு இதழ் எத்தகைய நிலைப்பாட்டிலிருந்து செயல்பட்டுள்ளது என்ற தொகுப்பு அரசியலை வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
இலக்கியம் குறித்த பதிவுகளோடு நவீன ஓவியம், நவீன நாடகம், நவீன சினிமா மற்றும் நிகழ்த்துக்கலைகள் தொடர்பான உரையாடல்களை முன்னெடுக்கும் நிலையில் தமிழ்ச் சிறுபத்திரிக்கை மரபின் பரிமாணங்கள் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில் தான் கனவு இதழ் வெளிவர தொடங்கியது. காலண்டிதழாகக் கனவு இதழ் பல்வேறு களங்களைத் தனக்குள் கொண்டு இயங்குகிறது. கனவு இதழ் தொகுப்பில் கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, குறும்படம், நாடகம், கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள் எனப் பல்வேறு களங்களைத் தொகுத்தளித்துள்ளதன் மூலம் இதனை அறியமுடிகிறது. கனவு இதழ் தொகுப்பை வாசித்ததன் அடிப்படையில்,
-        கனவு இதழின் ஆசிரியர் தான் கனவு இதழ் தொகுப்பையும் உருவாக்கியுள்ளார். ஆனால் அவருடைய தொகுப்பு முயற்சி இதழின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமையவில்லை.
-        கனவு இதழ் தொடங்கிய காலத்தில் அதன் செயல்பாடுகள் நவீன இலக்கியம் என்பதைத் தாண்டி நவீன சினிமா குறித்த பதிவுகளைப் பெருமளவில் செய்துள்ளது. ஆனால் நவீன சினிமா குறித்த கருத்தாடல்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை. தொகுப்பு உருவான சூழலில் கனவு இலக்கிய இதழாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது.
-        எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் கனவு இதழ் இளம் எழுத்தாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால் தொகுப்பில் பிரபலாமனவர்களின் படைப்புகளும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன.
-        பிரபலமானவர்களின் எழுத்துகளை முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர் (அசோகமித்திரன், க.நா.சு., முதலிய படைப்பாளர்கள்). மேலும் இதழில் எழுதிய படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளைத் தனியே நூல்வடிவிலும் கொண்டும் வந்துள்ளனர். அசோகமித்திரன் 77 என்ற நூலைச் சுப்ரபாரதிமணியன் தொகுத்துள்ளார். கனவு இதழ் 1994ஆம் ஆண்டு வெளியிட்ட "கனவு = அசோகமித்திரன் விமர்சன மலரில் " இடம் பெற்ற கட்டுரைகள் பல அந்நூலில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பாளர் சுப்ரபாரதிமணியன் என்பது இங்கு நினைக்கத்தக்கது.
-        இதழில் வெளிவந்த படைப்புகள் தொகுப்பில் இடம்பெறும் போது கனவின் எத்தனையாவது இதழிலிருந்து என்ற குறிப்பின்றித் தொகுக்கப்பட்டுள்ளது. ஆண்டு விவரம் மட்டும் அளித்துள்ளனர். அதுவும் காலவரிசை முறையில் அமையவில்லை. மேலும் சில படைப்புகளில் ஆண்டு விவரம் தவறாகப் பதிவாகியுள்ளது.
-        தொகுப்பு நூலில் தொகுப்புரை, பதிப்புரை போன்றவை மிகவும் முக்கிய வரலாற்று ஆவணங்கள். ஆனால் அவற்றைப் பெயர் அளவில் மட்டும் பதிவுசெய்துள்ளது. எதன் அடிப்படையில் தொகுப்பு முறைமை மேற்கொள்ளப்பட்டது இதழின் முக்கியத்துவம் தொகுப்பின் தேவை முதலிய பகிர்தல்கள் தொகுப்புரையில் இடம்பெறவில்லை.
தமிழ் சிறுபத்திரிக்கை வரலாற்றைக் கட்டமைத்த வல்லிக்கண்ணன் சிறுபத்திரிக்கை வரலாற்றில் கனவு இடம் குறித்து,
1987-ல் பிறந்து, நல்ல முறையில் வளர்ந்து, இப்பவும் வந்துகொண்டிருக்கிற இலக்கியச் சிற்றேடு கனவு. சுப்ரபாரதிமணியன் செகந்திராபாத்திலிருந்து இக்காலாண்டிதழை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் பாராட்டப்பட வேண்டிய விதத்தில் கனவு ஆண்டு மலர் வெளியிடப்படுகிறது. சிறுகதை மலர், மலையாளக் கவிதைகள் சிறப்பிதழ் கட்டுரைச் சிறப்பிதழ் என்றெல்லாம் கனவு இதழ்கள் மலர்ச்சி பெற்றுள்ளன. படைப்பிலக்கியத்துக்கு கனவு நல்ல தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது (வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிக்கைகள், ப.341).
பதிவுசெய்துள்ளது கவனிக்கத்தக்கது. கனவு இதழ் நவீன சினிமா குறித்த உரையாடல்களை முன்னெடுத்த நிலையில் அதன் செயல்பாடுகள் வீரியமின்றி அமைந்தற்கான பின்புலத்தை,
திரைப்படங்கள் குறித்த சிற்றிதழ் செயல்பாடு, பெரும்வீச்சாக உருப்பெறவில்லை என்றே தோன்றுகிறது. திரைப்படத்துறை பெரும் தொழிற்சாலையோடு தொடர்புடையதாக இருப்பதால், மாற்று திரைப்படம் உருவாகாதச் சூழலில் அவை குறித்த விவாதங்களும் மிகக் குறைந்த அளவில்தான் தமிழ்ச் சிறுபத்திரிக்கை விவாதத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கருதமுடியும் (வீ.அரசு, சிறுபத்திரிக்கை அரசியல், ப.63).
என்ற வீ.அரசு அவர்களின் கருத்தை இங்கு இணைத்தெண்ணும் போது கனவு இதழ் சினிமா குறித்த உரையாடலுக்கு வழிவகுத்த நிலையில் முழுமை பெறாமல் போனதற்கான காரணத்தை உள்வாங்க முடிகிறது.
கனவு இதழ் தொடங்குவதற்கான காரணத்தைக் குறித்தும் கனவு என்ற பெயரை வைத்து இதழ் வெளிவருவதற்கான காரணத்தைக் குறித்தும் கனவின் தொடக்கக் கால இதழ்களின் முயற்சிகள் குறித்தும் சுப்ரபாரதிமணியன்,
பம்பாய் தமிழ்ச் சங்கத்திலிருந்து ஏடு, கேரள திருவனந்தபுரம் தமிழ் சங்கத்திலிருந்து கேரளத்தமிழ்போன்றவை அந்ததந்த மாநில தமிழர்களின் கலாச்சார வெளிப்பாட்டிற்கான பத்திரிக்கைக் களங்களாக இருந்தன. செகந்திராபாத் இளைஞர்களுக்கு அவ்வகைக் களங்கள் எதுவுமில்லாமல் இருந்தது... இந்தச் சூழலில் ஏடு, கேரளத்தமிழ் போன்ற களமாவது செகந்திராபாத் தமிழ் இளைஞர்களுக்கு (சொற்பமாய் இரு கைவிரல்களின் எண்ணிக்கை தான்) கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் ஆரம்பிக்கப்பட்டது தான் கனவு இதழ். மகாகவி பாரதியாரின் நிறைவு பெறாத சுயசரிதையின் பெயர்: கனவு செகந்திராபாத் தமிழ் இளைஞர்களின் ஆரம்ப முயற்சிக் கவிதைகள், அங்குள்ள தமிழ் சமூகவியலில் தென்படும் விசித்திரங்கள், தமிழர்களின் வாழ்க்கை பற்றின பல சித்திரங்களைக் கொண்டதாகக் கனவு பத்திரிக்கையின் ஆரம்ப இதழ்கள் இருந்தன (கனவு இதழ் தொகுப்பு, தொகுப்புரை).
என்று மேலோட்டமாகக் கருத்துரைக்கிறார்.
கனவு தன்னைச் சிறுபத்திரிக்கையாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிவந்து கொண்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காகத் தன் நிலைப்பாட்டிலிருந்து விலகி செயல்படும் தன்மையைக் கனவு இதழும் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கனவு இதழ் தொகுப்பில் சுப்ரபாரதிமணியன்,
இலங்கைச் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்த போது ஏற்பட்ட ராஜீவ்காந்தியின் படுகொலையும் அரசியல் காரணங்களும் அவ்விதழை அரசியல் கட்டுரைகளும், தீவிர விமர்சனங்களும் கொண்ட படைப்புகளை நீக்கிவிட்டு சாதாரண இதழாக கொண்டுவர வேண்டியக் கட்டாயத்திற்கானது (கனவு இதழ் தொகுப்பு, தொகுப்புரை).
என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் இதனை அறியமுடிகிறது. இதழ் வெளிவந்த காலத்தில் செயல்பட்ட அரசியல் காரணங்கள் கனவு இதழ் தொகுப்பிலும் ஊடாடியிருக்கக் கூடும்.
கனவு இதழ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள விடயங்களைப் பின்வரும் நிலைகளில் பகுத்துக் கொள்ளலாம்.
-        கட்டுரைகள்
-        சிறுகதைகள்
-        மொழிபெயர்ப்பு
-        குறும்படம்
-        நாடகம்
-        கவிதைகள்
-        மொழிபெயர்ப்பு கவிதைகள்

கனவு இதழ் தொகுப்பில், பாவண்ணன் முதல் சூத்ரதாரி வரை எழுதப்பட்டுள்ள 38 ஆய்வாளர்களின் கட்டுரைகளும், சிறுகதைகளில் அசோகமித்திரன் முதல் பாப்லோ அறிவுக்குயில் வரை 40 படைப்பாளர்களின் சிறுகதைகளும் க.நா.சுப்பிரமண்யம் முதல் மகுடேசுவரன் வரை 39 கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. குறும்படம், நாடகம் முறையே ஒரே ஒரு படைப்பை மட்டும் கொண்டு கனவு இதழ் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான படைப்புகள் கனவு சிறப்பிதழ்களில் எழுதப்பட்டவை.
கட்டுரைகள்:
            கனவு இதழ் தொகுப்பில் 38 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தனித்த ஆளுமையின் இலக்கியப் பதிவு, நாவல் குறித்த விமர்சனம், கவிதை குறித்த மதிப்பீடு, நாடகம் தொடர்பான புரிதல்கள், கோட்பாடுகளின் விளக்கங்கள், திரைப்படங்களின் போக்குகள் போன்றவை குறித்த பதிவுகளை முன்னிறுத்தியுள்ள கட்டுரைகள் இப்பகுதியில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
இலக்கியம் குறித்த இலக்கிய ஆளுமையின் கருத்தாடலாகப் பொன்னீலன், ஞானி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோருடைய கட்டுரைகள் அமைந்துள்ளன. யமுனா ராஜேந்திரன் பாலுமகேந்திராவை எதிர்கொண்ட நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இதனைக் கட்டுரை பகுதியில் தொகுத்துள்ளனர்.
தனித்த ஆளுமை குறித்த பதிவாகச் சுந்தராமசாமியின் சிறுகதை, கவிதைகள் தொடர்பான கட்டுரைகளும், ஆ.மாதவன், ஆத்மாநாம், சிற்பி ஆகியோரின் படைப்புகள் குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நாவல் படைப்புகளை விமர்சனம் செய்யும் விதமாக நல்ல நிலம், நுண்வெளிகிரகணங்கள், யுரேகா நகரம், புலிநகக் கொன்றை ஆகிய படைப்புகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைக் குறிப்பிடலாம். இக்கட்டுரைகள் அனைத்தும் நடுநிலை தன்மையுடன் எழுதப்படாமல் ஒட்டுமொத்தமான போற்றுதலை முன்வைத்து நகர்கிறது. ராஜமார்த்தாண்டன் எழுதியுள்ள சுந்தரராமசாமியின் கவிதைக்கலை என்ற கட்டுரையில் சுந்தரராமசாமியின் கவிதை பாரதியோடு ஒத்தும் புதுமைப்பித்தனிலிருந்து விலகியும் செயல்படும் போக்கை எடுத்துரைத்துள்ளார். சுந்தரராமசாமியின் கவிதைகளைக் குறித்து நேர்மையான விமர்சனத்தை மேற்கொண்டுள்ளார். 
கவிதைகள் குறித்த கட்டுரைகளாகச் சுஜாதாவின் கவிதை எழுது, அபியின் மௌனத்தை நோக்கிய நகர்வு கவிதையில், அபூ.சையது அயூபின் நவீனத்தன்மை - அமங்கல உணர்வு - தற்காலக் கவிதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சுஜாதாவின் கவிதை எழுது என்ற கட்டுரை தமிழ்நாடனின் எழுத்தென்ப என்ற நூலின் முன்னுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கட்டுரை நேரடியாக இதழுக்கென்று எழுதப்படவில்லை இவ்வாறான போக்குகளுக்கும் கனவு இதழ் இடம் தந்துள்ளது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.
நாடக அரங்கு சார்ந்து மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஆனந்தராணி பாலேந்திரா எழுதிய மேடையில் பெண்கள் என்ற கட்டுரையில் தொடக்கக் காலத்தில் மேடையில் பெண்களின் பதிவு எத்தன்மையில் அமைந்துள்ளது குறித்தும் இலங்கையில் செயல்படும் நாடக மேடையில் பெண்களின் பங்கு என்னவாக இருந்துள்ளது என்பதைக் குறித்தும் ஆழமான பார்வையுடன் அமைந்துள்ளது.
பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் முதலிய கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழில் நவீனத்துவம் - பின்நவீனத்துவம் குறித்த ஞானியின் கட்டுரையும், பின் நவீனத்துவம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் காலச்சார தர்க்கம் பிரடெரிக் ஜேம்ஸனுடன் ஸ்டுவர்ட் ஹால், பின்நவீனத்துவம் தேசியம் சோசலிசம் கலாச்சாரச் சார்புவாதம் குறித்த உரையாடல் ரேடிகல் பிலாஸபி இஜாஸ் அகமதுடன் என்ற இரு கட்டுரைகளையும் தமிழில் கேயார் மொழிபெயர்த்துள்ளார். கட்டுரையாக இல்லாமல் உரையாடலாகத்தான் உள்ளது. இவ்விரண்டு கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பு பகுதியில் சேர்த்துத் தொகுத்திருக்கலாம். நவீனத்துவம், பின்நவீனத்துவம் குறித்த கருத்தாடல்களை முன்வைத்த நிலையில் இவ்விரு உரையாடல் பகுதிகள் அமைந்துள்ளன. மாலதியின் தேடிக்கொண்டிருப்பது என்ற கட்டுரையும் கோட்பாடுகள் சார்ந்து வெளிவந்த கட்டுரைகளாக அடையாளப்படுத்தலாம்.
கனவு இதழ் வெளிவந்த காலச்சூழலில் அந்த இதழின் கருத்துநிலைப்பாடு இதழ் தொகுப்பாக உருவாகும்போது மாற்றம் பெற்றுள்ளதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைத் தொகுத்துள்ளதன் மூலம் அறியமுடிகிறது. கனவு இதழ் சினிமா குறித்த உரையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால் தொகுப்பில் இருகட்டுரைகளையே இடம்பெறச் செய்துள்ளனர்.
1.         தமிழ் திரைப்படங்களில் தலித் மக்கள்: ஒரு பார்வை,
2.         அறவியல் - சினிமாக் கலைஞன் - இலக்கியவாதி - பாலுமகேந்திரா: யமுனாராஜேந்திரன் உரையாடல்
இவையும் இலக்கியத்துடன் தொடர்பு கொண்டவையாக அமைந்த நிலையில்தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. யமுனா ராஜேந்திரன் கனவு இதழில் சினிமா குறித்த தனது பார்வையை இந்து முஸ்லீம் பிரச்சனையும் சினிமா எனும் காட்சி ஊடகமும் (யமுனா ராஜேந்திரன் இதழ் 41) என்ற சமூக பிரச்சனைகளை உள்ளடக்கிய கட்டுரைகள் எழுதியுள்ள நிலையில் அவையெல்லாம் இடம்பெறாமல் போனதற்கான காரணம் கனவு இதழ் தொகுப்பு, இலக்கிய இதழ் என்ற அடையாளத்தைப் பெற்று வெளிவந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறது. பாரதிராஜா, மணிரத்னம், கமலஹாசன் முதலிய சினிமா திருவுருக்களைக் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கனவாக அமைந்த நிலையில் அவற்றையெல்லாம் தொகுப்பில் இடம்பெறாமல் தவிர்த்துள்ளனர். கனவு இதழில் சினிமா நூற்றாண்டையொட்டி ஐந்து இதழ்கள் உலக சினிமா சிறப்பிதழ்களாக யமுனா ராஜேந்திரன் படைப்புகளைப் பெருமளவில் தாங்கி வந்துள்ளன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
சிறுகதைகள்:
சிறுகதைகள் என்ற பகுதியில் 40 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தேர்வுசெய்யப்பட்ட படைப்புகளாக விளங்கும் இக்கதைகள் பெரும்பாலும் அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகளையும் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளையும் என்று ஒருசேரத் தொகுத்தளித்துள்ளது. அசோகமித்திரன் குழந்தைகள் சிறுகதையை முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர்.  நவீனச் சிறுகதை வாசிப்பினை ஏற்படுத்தவல்ல கதைகளாக, பிரமிளின் கருடயோகி, நகலனின் பிரிவு, தமிழவனின் பிடிக்காத நிறம் பூசப்பட்ட போலீஸ்வேன், ஜெயமோகனின் வனம், எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு வளையல்கள், சு.வேணுகோபாலின் உடம்பு முதலியவற்றைக் குறிப்பிடலாம். கதைகளின் மொழிநடை பெரும்பாலும் பொது மொழிநடை அமைப்பிலும் சில கதைகள் வட்டாரத் தன்மையிலும் அமைந்துள்ளன. நவீனச் சிறுகதைகள் எழுதுவதற்கான களமாகக் கனவு செயல்பட்டுள்ளது என்பதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை வாசிப்பதன் மூலம் உணரமுடிகிறது.
நோபல் பரிசுப்பெற்ற ஏணஸ்ட் ஹெமிங்வே எழுதிய சுத்தமானதும் ஒளிமயமானதுமான ஓர் இடம்: அமெரிக்கா கதை இடம்பெற்றுள்ளது. தொகுப்பின் மூலம் நோபல் பரிசு பெற்ற கதை இது என்பது அறியாத நிலையில் கனவு இதழ் தொடர்ச்சியாக நோபல் பரிசு பெற்ற கதைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் இக்கதை. ஆனால் இது குறித்த எந்தப் பதிவையும் தொகுப்பு மேற்கொள்ளவில்லை. மேலும் தமிழில் இதை யார் மொழிபெயர்த்தார் என்பதும் அறியதற்கில்லை.
மொழிபெயர்ப்பு:
மொழிபெயர்ப்பு என்ற இப்பகுதியில் 5 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. மைத்ரேயிதேவி எழுதிய கொல்லப்படுவதில்லை என்ற வங்காள நாவலையும் ஜெயமித்ரா எழுதிய கொல்லப்படுகிறது என்ற வங்காள நாவலையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை. கொல்லப்படுகிறது நாவலின் ஒரு பகுதியை சு.கிருஷ்ணமூர்த்தி (2000) மொழிபெயர்த்துத் தந்துள்ளார். வங்காளத்தில் புகழ்பெற்ற இரண்டு நாவல்களைக் குறித்த அறிமுகமும் இரு எழுத்தாளர்களின் மாறுப்பட்ட தன்மையும் இதன்மூலம் வெளிப்படுகிறது.

வங்காள மொழியில் ஜெயாமித்ரா எழுதிய நடனம் என்ற சிறுகதையை டி.எம்.ரகுராம் (2001) தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எய்ட்ஸ் நோயாளியைக் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்த எழுதப்பட்ட கதை. இந்த சமூகம் எய்ட்ஸ் வந்த நபரை உறவுகளின் தொடர்பின்றித் தனித்து வாழவேண்டிய சூழலை ஏற்படுத்திவிடுகிறது. இந்நிலையில் ஒரு சக மனிதனோடு தொடர்புகொள்ள கம்யூட்டர் உதவியாக அமைவதை வித்தியாசமாக இக்கதை பதிவுசெய்துள்ளது.
கன்னட மொழியில் தேவனூரு மகாதேவ எழுதிய குஸூமபாலை நாவலைப் பாவண்ணன் (2002) தமிழில் அறிமுகம் செய்துள்ளார். பசித்தவர்கள் என்ற தலைப்பில் நேஷனல் புக் டிரஸ்டு வெளியீடாக பாவண்ணன் மொழிபெயர்ப்பில் இந்நாவல் முழுமையாக வெளிவந்துள்ள நிலையில் இங்கு நாவலின் முதல் அத்தியாயத்தை மட்டும் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.
சர்போக்ரோசியன் எழுதிய குரோசெஸ்தான் பல்யூஜிக் என்ற மூலக்கதை தமிழில் மலர்களும் மகாராணியும் என்ற பெயரில் தி.சு.சதாசிவம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எந்த மொழி படைப்பு என்ற குறிப்பு இல்லை. மலையாள மொழியில் பி.கெ.நாயரால் எழுதப்பட்ட திரைப்படமும் இலக்கியமும் என்ற கட்டுரையைத் தமிழில் தி.சு.சதாசிவம் (2002) மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். திரைப்படம் குறித்த ஆழமான பார்வையுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் இலக்கியத்தில் செவ்வியல் தன்மைகள் கொண்ட செவ்வியல் படைப்புகள் இருப்பது போலத் திரைப்படத்திலும் செவ்வியல் வகை திரைப்படங்கள் உருவாகியுள்ளமையைக் குறிப்பிட்டுள்ளார். திரைப்படம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் திரைப்படத்தில் காட்சிப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
இப்பகுதியில் தொகுத்தளிக்கப்பட்ட படைப்புகளில் திரைப்படமும் இலக்கியமும் என்ற கட்டுரையும் ஜெயமித்ரா எழுதிய நடனம் என்ற புனைவும் தான் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளன. மொழிபெயர்ப்பு நாவல்களை அறிமுகம் செய்வதில் அந்நாவலின் ஒரு பகுதியை மொழிபெயர்த்துத் தருவது நாவலை வாசகர் வாசிக்க வைக்கும் முயற்சியாக இவ்வாறு செய்தனர் போலும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என்பது கேள்விக்குறியே. இதற்கு மாறாக மொழிபெயர்ப்பு நாவல்கள் குறித்த முழுமையான பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
குறும்படம்:
சினிமா குறித்துக் காத்திரமான விவாதங்களை முன்வைத்துள்ள கனவு இதழில் குறும்படம் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காட்சி வடிவமான குறும்படத்தை எழுத்து வடிவில் இதழ்களில் வெளியிடும் பணியைக் கனவு இதழ் சிறப்பாகச் செய்து கொண்டு வருகின்றது.
ஆனால் தொகுக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு குறும்படத்தை அளித்துள்ளனர். மலையாள மொழியில் பாலச்சந்திரனால் வெளிவந்த குறும்படத்தைத் தமிழில் டி.எம்.ரகுராம் தமிழ் மொழிபெயர்த்துள்ளார். 2002ஆம் ஆண்டு இதழில் வெளிவந்த இக்குறும்படத்தின் பெயர்  கிடைத்தால் ஒரு கட்டில், போனால் ஒரு மரம்.  தந்தையின் ஆசையை நிறைவேற்றிய நிலையில் மகன், ஆனால் அந்த ஆசையை அனுபவிக்காமல் உயிரை விடும் தந்தை என்று விரிந்து செல்லும் கதையை முன்வைத்து இக்குறும்படம் நகர்கிறது. ஐந்து காட்சிகளுடன் விவரிக்கப்படும் இக்குறும்படத்தில் மலையாள மக்களின் வாழ்வில், மனிதனின் இறப்போடு ஒரு மரத்தின் மரணமும் சம்பந்தப்பட்டுள்ள சடங்கைக் குறித்த பதிவாக உள்ளது.
நாடகம்:
கருஞ்சுழி வ.ஆறுமுகம் என்பவரால் 2002ஆம் ஆண்டு எழுதப்பட்ட தூங்கிகள் என்ற ஒரே ஒரு நாடகம் மட்டும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நாடகத்தை எழுத்துவடிவில் கொடுக்கும்போது காட்சிகளின் விவரணை தெளிவாக அமைந்திருந்தால் தான் நாடகத்தை உள்வாங்க முடியும். இந்த நாடகம் தெளிவான விவரணையுடன் அமைந்துள்ளது. தூங்கிகள் என்ற இக்கதையில் முதலில் தூங்காமல் விழித்துக் கொண்டு இந்த நாடகத்தைப் பார்க்கும் மக்களைப் பார்த்து தூக்கம் வரவில்லையா என்று கேட்டு, இந்நாடகத்தில் வரும் இருவரும் உங்களைத் தூங்க வைத்துவிடுவர் என்று ஆரம்பிக்கும் நாடகத்தில், தூங்கிகள் என்ற கதாபாத்திரத்தில் வரும் முன்னவன், பின்னவன் காட்டுவழியில் உள்ள இரயில்பாதையில் நிற்காத ரயிலுக்காகக் காத்திருக்க எப்படி இங்கு இருவரும் வந்தடைந்தனர் என்பது குறித்து ஒருவருக்குக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் செய்திகள். விமான விபத்திலிருந்து காதலியால் காப்பற்றப்பட்ட நிலையில் ஒருவன், தன் தாயுடன் இரயிலில் சென்றுக்கொண்டிருக்கும் போது வழியில் இறங்கியதால் இரயில் சென்ற தாயை தேடி இரயிலுக்காகக் காத்திருக்கும் மற்றொருவன் என்ற உள்ளார்ந்த புரிதலோடு நகர்ந்து செல்லும் தூங்கிகள் என்ற நாடகம் விழிப்பிற்கான எச்சரிக்கையாக உள்ளது.
கவிதைகள்:
க.நா.சுப்ரமணியம் முதல் மகுடேசுவரன் ஈறாக 39 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 1987ஆம் ஆண்டு தோன்றிய கனவின் ஒவ்வொரு இதழிலும் கவிதைகள் எழுதப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளின் மொழிநடை பெரும்பாலும் நவீனக் கால எழுத்துகளை உட்செறித்து எழுதப்பட்ட வடிங்களாக அமைந்துள்ளன. நெடுங்கவிதைகளும் குறுங்கவிதைகளும் என்று இருத்தரப்பட்ட வடிவங்களைக் கொண்ட கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. மகுடேசுவரனின் பாப்பா என்ற கவிதை பாரதியின் ஓடிவிளையாடும் பாப்பா என்ற கவிதையை நினைவுபடுத்தினாலும் அதிலிருந்து மாறுபட்டு நிற்கின்றது. கே.ஏ.குணசேகரன் கிராமம் என்ற கவிதை கிராமச் சூழலை நம் கண்முன் நிறுத்துகிறது. கிராமத்தில் சாதி என்பது எவ்வளவு ஆழமாக, மனிதனின் வாழ்க்கையில் ஊடுருவி செல்வதாக அமைந்துள்ளது என்ற பதிவை முன்வைக்கிறார்.
கே.ஏ.குணசேகரன் எழுதிய கிராமம் என்ற கவிதை இதழில் 2001ஆம் ஆண்டு எழுதப்பட்ட கவிதையாகப் பதிவுபெற்ற நிலையில் கனவு இதழ் தொகுப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த படைப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகுடேசுவரனின் பாப்பா கவிதையும் 1996ஆம் ஆண்டு எழுதப்பட்ட கவிதையாக இதழில் காணப்பட, 1994ஆம் ஆண்டு என்று தொகுப்பில் உள்ளது. இவ்வாறு தவறாகப் பதிவுசெய்வதற்கு எந்த ஆண்டு என்ற குறிப்பின்றியே தொகுத்திருக்கலாம்.
மொழிபெயர்ப்பு கவிதைகள்:
மொழிபெயர்ப்பு கவிதைகள் என்ற பகுதியில் ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு, இந்தி, வங்காளம், ராஜஸ்தானி, மலையாளம் முதலிய மொழிகளில் வெளிவந்துள்ள கவிதைகள் முறையே அமைந்துள்ளன. ஐந்து கவிதைகளிலும் மூலத்தில் எழுதியவரின் பெயர் தெளிவாக இடம்பெற்றுள்ளன. ஆனால் மொழிபெயர்த்தவர் குறித்த பதிவு சரியாக அமையவில்லை. முதல் கவிதையை இளம்பாரதி மொழிபெயர்த்துள்ளார் என்பது மட்டும் தெளிவாக அமைந்துள்ளது. ஆனால் பின்னான்கு கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் குறித்த பதிவில் கடைசி கவிதையின் கீழ் ஜயன் என்ற பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. நான்கு கவிதைகளை மொழிபெயர்த்தவர் ஜயன் என்ற ஒருவராகவும் இருக்கலாம். ஆனால் உண்மை இதழின் மூல வடிவம் கிடைக்கும் நிலையில்தான் வெளிப்படும்.
தொகுப்பின் பின்னடைவுகள்
கனவு இதழ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள படைப்புத் தேர்வு எப்படி நடந்திருக்க கூடும்? என்ற கேள்வியை முன்வைத்து நோக்கும் போது பிரதிநிதித்துவப் படைப்புகளின் தொகுப்பா? தேர்ந்தெடுக்கப்பட்டவையா? காலத்தின் வரிசை? கருத்துக்கு முதன்மையா? விருப்பங்களின் தேர்வா? படைப்புக்கு முக்கியத்துவமா? படைப்பாளருக்கா? கிடைத்தவற்றின் திரட்டா? என்று பல கேள்விகள் எழும்.  இவற்றை முன்வைத்து கொண்டு கனவு இதழை அணுகினால் காலவரிசை இல்லை. எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இருபது ஆண்டுகளில் வெளிவந்த படைப்புகளில் கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம், குறும்படம், கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள் என்று பாகுபடுத்திக் கொண்டு அதில் குறிப்பிட்ட படைப்புகளைத் தெரிவுசெய்துள்ளனர். பெரும்பாலும் சிறப்பிதழ்களில் வெளிவந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தொகுப்பின் வெற்றிக்குப் படைப்புத்தெரிவு மிக முக்கியமாக அமைகிறது. மேலும் வரலாற்றுப் பதிவாக அமையும் நிலையில் மிகவும் சிரத்தையுடன் இதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட ஆளுமை சார்ந்த படைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். மேலும் அந்த ஆளுமைகளின் படைப்புகளை முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர். குறிப்பிட்ட ஆளுமைகளின் கட்டுரைகளும் கதைகளும் தொகுப்பின் தொடக்கமாக இடம்பெறுவதால் மட்டும் தொகுப்புச் செம்மைபெற்று விடும் என்பது சிந்திக்கத்தக்கது.
தொகுப்பில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தேர்வுசெய்யப்பட்ட படைப்புகள் என்ற குறிப்பின் கீழாகத் தொகுக்கப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் இந்தத் தேர்வு நிகழ்த்தப்பட்டுள்ளது போன்ற விவரணைகள் எதுவும் தொகுப்புரையில் இடம்பெறவில்லை. கட்டுரை பகுதியில் சுந்தரராமசாமியின் சிறுகதை, கவிதைகள் குறித்த கட்டுரைகளின் தொடக்கத்தோடு வெளிவந்துள்ளது. சிறுகதையில் அசோகமித்திரனின் கதையை முன்வைத்துள்ளனர். கவிதையில் க.நா.சு.வைத் தொடக்கமாகக் கொண்டுள்ளனர். எதற்காக இந்த முறைமையில் தொகுத்துள்ளனர். காலவரிசையைப் பின்பற்றியதால் என்றால் இல்லை. இவர்கள் எல்லோரும் கனவு இதழில் எழுதியுள்ளனர் என்பதை எடுத்துரைக்கும் நிலையில் வாசகருக்கு ஒரு ஈர்ப்புத் தன்மையை உருவாக்க இவ்வாறு தொகுத்துள்ளனர்.
கனவு இதழ் தொகுப்பில் உள்ள படைப்புகள் அனைத்தும் கனவின் எந்த இதழிலிருந்து வெளியிடப்படுகிறது என்ற குறிப்பின்றி வெளிவந்துள்ளது. ஆனால் உள்ளடக்கப் பகுதியில் இடம்பெற்றுள்ள தலைப்புகளின் பக்கத்தில் ஆண்டு விவரம் மட்டும் தந்துள்ளனர். இதனையும் வரிசைமுறையில் தரவில்லை. இவை கால நிரலில் தொகுக்கப்பட்டிருந்தால் வாசகனுக்குப் பயன்படும் வகையில் அமைந்திருக்கும். 1987ஆம் ஆண்டு தொடங்கிய கனவு இதழ் தொகுப்பில் அந்த ஆண்டில் வெளிவந்த படைப்புகள் ஒன்றும் இடம்பெறவில்லை. இதனால் தொடக்கக் கால முயற்சிகள் குறித்து அறிந்துகொள்ள முடியவில்லை.
கனவு இதழ் தொகுப்பில் உள்ளவற்றிற்கும் இதழ் மூலவடிவத்திற்கும் முரண்கள் சில உள்ளன. அலட்சியத் தன்மையுடன் இதழ் தொகுப்பு உருவாகியுள்ளதை இந்தக் குளறுபடிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
·         நகுலனின் சிறுகதை பிரிவு 1985ஆம் ஆண்டு என்று இதழ் தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கனவு இதழில் இக்கதை 1988ஆம் ஆண்டு 8வது இதழில் என்று பதிவாகியுள்ளது. 1987ஆம் ஆண்டு தான் இதழ் தொடங்கப்பட்டது என்பதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமான விடயம்.
·         திடத்திலிருந்து ஆவியாகி என்ற சிறுகதை இதழ் தொகுப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்ததாகக் குறிப்பிட மூல வடிவமான இதழில் 2000ஆம் ஆண்டு என்று அமைந்துள்ளது.
·         கே.ஏ.குணசேகரனின் கிராமம் என்ற கவிதை தொகுப்பில் 2002ஆம் ஆண்டு என்று பதிவுபெற மூல வடிவமான இதழில் 2001ஆம் ஆண்டு என்று உள்ளது. குறிப்பிட்ட சில இதழ்களை மட்டுமே நேரில் காண நேர்ந்த நிலையில் இத்தகைய தவறுகள் அதிகமாக நிகழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.
·         படைப்போடு படைப்பாளர்களின் குறிப்பு இதழ்களில் இடம்பெற்றிருக்க, தொகுப்பில் சில கட்டுரைகள் மட்டும் அந்தச் சிறுகுறிப்போடு வெளிவந்துள்ளது.
·         அபி எழுதிய மௌனத்தை நோக்கிய நகர்வு கவிதையில் என்ற கட்டுரை சுந்தரராமசாமியின் நண்பர்கள் சந்திப்பில் வாசித்தது என்ற அடிக்குறிப்போடு இதழில் வெளியிட தொகுப்பில் அடிக்குறிப்பை நீக்கியுள்ளனர்.
இவ்வாறு தொகுப்புக்குள் இடம்பெறும் செய்திகளின் நம்பகத்தன்மை என்பது எந்த அளவிற்கு நிறைவாக அமைந்துள்ளது என்பது கேள்விக்குறியே.
நவீன சினிமா குறித்து ஒவ்வொரு இதழிலும் தொடர்ச்சியாக எழுதப்பட்டு வருகின்ற நிலையில், சினிமா குறித்த சிறப்பிதழ்களும் அதிகமாக வெளிவந்த நிலையில், தொகுப்பில் இலக்கிய இதழாக மட்டுமே கனவு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள படைப்புகளும் இதனை உறுதிசெய்கின்றது. இதழ் வெளிவந்த காலத்தில் எத்தகைய நிலைப்பாட்டிலிருந்தது என்பதும் தொகுப்பாக வெளிவரும் காலத்தில் எவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது என்பதும் தொகுப்பு அரசியலாக இனங்காணலாம்.
கனவு இதழில் படைப்போடு எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதழ் தொகுப்பில் எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பை விடுத்துள்ளனர். தொகுப்பில் சிறு குறிப்பாக அமைந்துள்ள அப்பகுதி சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. முழுமையாக இடம்பெற்றிருக்குமேயானால் சிறப்பான பதிவாக அமைந்திருக்கும்.
இலக்கிய இதழான கனவு இதழ் தொகுப்பில் ஒரு சில பெண் படைப்பாளர்களின் எழுத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். புனைபெயர்களில் எழுதியவர்களின் விவரங்கள் தொகுப்புகளில் தரப்படவில்லை. இந்நிலையில் பெண் எழுத்தாளர்களை அடையாளம் காண்பது அரிதாக உள்ளது. பெண் படைப்பாளர்களின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் கனவு இதழ் தொகுப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல பிரிவுகளில் தனது ஆளுமையைச் செலுத்திய படைப்பாளர்களும் கனவு தொகுப்பினுள் இடம்பெற்றுள்ளனர்.
தொகுப்புரை என்பது இதழ் குறித்த ஆழமான பார்வையை உள்வாங்கும் நிலையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் பதிப்புரை, தொகுப்புரை என்பவையெல்லாம் வெறும் பெயர் அளவில் மட்டுமே இதழ்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அதற்கான முக்கியத்துவத்தை உணராமல் எழுதியதாகத்தான் அப்பதிவுகள் நமக்கு உணர்த்துகின்றது. கனவு இதழ் வரலாற்று ஆவணமாகத் தமிழ் சிறுபத்திரிக்கை வரலாற்றில் நிலைத்துநிற்க எந்தச் சிரத்தையும் எடுக்கவில்லை என்பது இந்த இதழ் தொகுப்பு உணர்த்துகிறது.
நவீன இலக்கியம், உலக சினிமா சார்ந்த காத்திரமான பார்வைகளை முன்னெடுத்துவரும் கனவு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் எதற்காக இந்தத் தொகுப்பு உருவாக்கம் என்ற கேள்விக்கு, இதழை யாரும் வாசிக்காத நிலையில், இதழின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் தன்மையில் இதனை வெளியிட்டுள்ளனர் என்ற விடை இயல்பாகவே வெளிப்படுகிறது.  புற்றீசல் போல் சிற்றிதழ்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள ஏற்பட்டதாக இத்தொகுப்பை அடையாளங்காணலாம்.
கனவு இதழ்
இடம்பெயர்ந்து வாழும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் தம் கருத்துகளையும் எண்ணங்களையும் மற்றவர்களிடம் பரிமாறிக் கொள்ளும் அச்சு ஊடகமாகச் சிறுபத்திரிக்கை செயல்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல சிற்றிதழ்களை நடத்துவதைப் போல இந்தியாவின் பிற மாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழகத் தமிழர்களும் பல சிற்றிதழ்களை நடத்தி வருகின்றனர். இப்படி, ஆந்திர மாநிலத்தில் செகந்திராபாத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கொண்டுவந்ததுதான் இந்தக் கனவு என்ற இதழ். இது 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழுக்கு நல்ல இலக்கியத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன் தொடங்கியதாகக் கூறுகிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். 1987ஆம் ஆண்டு முதல் செகந்திரபாத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த கனவு இதழ் 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. கனவு இதழில் இருபதாண்டுகளில் (1987-2007) வெளிவந்துள்ள படைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் என்ற நிலையில் 2008ஆம் ஆண்டு கனவு இதழைத் தொகுத்துள்ளது காவ்யா பதிப்பகம்.
இன்றைய கனவு இதழில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், போன்றவை இடம்பெற்று வருகின்றன. நவீன இலக்கியம் மட்டுமல்லாது நவீன நாடகங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள் குறித்தும் முக்கியமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இரா.நடராசன், யமுனா ராஜேந்திரன், தேவதேவன், கனிமொழி, ஜெயமோகன், பாவண்ணன், சிபிச்செல்வன், பா.சத்தியமோகன், சு.வேணுகோபால், செந்தூரம் ஜகதீஷ், எஸ்.செந்தில்குமார், ப்ரிதிபா ஜெயசந்திரன், அன்பாதவன் மதியழகன் சுப்பையா, வளவதுரையன், இளஞ்சேரல், பாலைநிலவன், விக்கிரமாதித்யன், யவனிகாஸ்ரீராம், தமிழ்நாடன், மகுடேஸ்வரன், புவனராஜன், பாலா, சுப்ரபாரதிமணியன் என அனைத்துத் தரப்பைச் சார்ந்த படைப்பாளிகளின் கனவில் இடம்பெற்று வருகின்றன. 
கனவு சிறப்பிதழ்கள் பலவற்றையும் வெளியிட்டிருக்கிறது. சினிமா நூற்றாண்டும் சிறப்பிதழ்கள் 5 (41 முதல் 44 வரை 5 இதழ்கள்), தெலுங்கு கவிதைகள் சிறப்பிதழ், நவீன கன்னடக் கவிதைகள் சிறப்பிதழ், மலையாளக் கவிதை சிறப்பிதழ், சுந்தரராமசாமி சிறப்பிதழ், அசோகமித்திரன் சிறப்பிதழ், நோபல் பரிசுப் பெற்ற எழுத்தாளர் கதைகள் சிறப்பிதழ், இலங்கை சிறப்பிதழ், புலம்பெயர்ந்தோர் சிறப்பிதழ் 3, சிறுகதை சிறப்பு இதழ்கள் 2 எனப் பல முக்கியமான சிறப்பிதழ்கள் வெளிவந்திருக்கின்றன. நவீனக் கலை இலக்கியத் தளத்திலும் முக்கியமான இதழாகத் தீவிரத் தேடலுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது கனவு.   
ஆசிரியர் பற்றித் தற்போது திருப்பூரில் வசித்துவரும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், சாய்த்திரை, தேநீர் இடைவேளை, சமையலறை கலையங்கள் உள்ளிட்ட 6 நாவல்களும், தொலைந்து போன கோப்புகள் உள்ளிட்ட 14 சிறுகதை நூல்களும், 2 குறுநாவலும், 1 நாடகமும், 3 கட்டுரை நூல்களும் எழுதியிருக்கிறார். உலகத் திரைப்படங்கள் குறித்துப் பல முக்கியமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சாயத்திரை நாவல் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பயன்பட்ட நூல்கள்:
1.         அரசு, வீ., சிறுபத்திரிக்கை அரசியல், பரிசல் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர், 2006.
2.         கனவு இதழ்தொகுப்பு, சுப்ரபாரதிமணியன் (தொ.ஆ.), காவ்யா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர், 2008.
3.         தமிழ்நூல் தொகுப்பு வரலாறு சங்ககாலம் முதல் சமகாலம் வரை, பாரதி புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு, 2010.
4.         வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிக்கைகள், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 1991.