Sunday, March 24, 2013

தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடு (அடியை முன்னிறுத்தி)


தமிழ்ச் செய்யுள் மரபைப் புரிந்துகொள்ளவும் தமிழ்ப் பாவடிவங்களை அறுதியிடவும்  நமக்குக் கிடைத்துள்ளவற்றுள் முதன்மையான இலக்கணமாகத் தொல்காப்பியச் செய்யுளியல் பகுதி விளங்குகிறது. பிற்காலத்தில் யாப்பு என்பது அடிவரையறை உடைய பாட்டு என்பதை மட்டும் வழங்கி நிற்க, தொல்காப்பியம் அடிவரையறை இல்லாத பிற செய்யுள் மரபுகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. பொருண்மை அடிப்படையில் செய்யுளை அணுகும் ஒரே இலக்கண நூலாகத் தமிழிலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் ஒன்றே நிலைநிற்கிறது. தொல்காப்பியச் செய்யுளியல் சிந்தனை மரபு என்பது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. பழந்தமிழ்ச் செய்யுளின் புலமையின் உச்சத்தை அறுதியிட தொல்காப்பியரின் பாவியல் கோட்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள முயல்வது அவசியம்.

தொல்காப்பிப் பாவியல் கோட்பாடு என்ற தொல்காப்பியரின் எழுத்துவகை அடி, சீர்வகை அடி என்ற இரண்டையும் முன்னிறுத்திப் பாவோடு தொடர்புபடுத்தும் நிலையில் ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் இரண்டுநிலைகளில் வழங்கி வந்த வரலாற்றைத் தொல்காப்பியர் எடுத்துரைக்கிறார் என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிடும் ‘தூக்கு கோட்பாடு’ என்பது அடியை முன்னிறுத்தி அமைந்தது என்றும் அது பிற்கால இலக்கணங்களில் இடம்பெறும் தளை அடிப்படையில் உருவான ஓசை கோட்பாட்டிலிருந்து விலகி நிற்பதையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.

தொல்காப்பியர் சுட்டும் எழுவகை யாப்பில் (தொல்.செய்.75) ஒன்றான பாட்டில் இடம்பெறும் அடி என்பது நாற்சீரால் அமைய வேண்டும் (தொல்.செய்.31) என்றும் அந்த நாற்சீர் கொண்ட அடியில் தான் தளையும் தொடையும் பார்க்க வேண்டும் (தொல்.செய்.32) என்றும் பாட்டின் சிறப்பு என்பது நாற்சீர் கொண்ட அடியை முன்னிறுத்தி அமைவது (தொல்.செய்.34) என்றும் எடுத்தியும்புகிறார். இதனால் அடியின் சிறப்பையும் தொல்காப்பியர் அடிக்கு அளித்திருக்கும் முக்கியத்துவமும் புலப்படுகிறது. எழுத்துவகை, சீர்வகை என்ற இருவகை அடிகளைக் குறிப்பிட்டுள்ள நிலையில் பாட்டும் இருவகை அடிகளைப் பெறும் என்பதுஅடியின் சிறப்பே பாட்டு’ என்பதால் வெளிப்படையாகிறது. ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் எழுத்துவகை அடிகளைக் கொண்ட பா, சீர்வகை அடிகளைக் கொண்ட பா என்ற இருவகைப்பட்ட பாவடிவங்களாக வழங்கி வந்துள்ளது.

எழுத்துவகைப் பாக்களும் சீர்வகைப் பாக்களும்

நாற்சீர் கொண்ட அடியில் எழுத்தெண்ணிக்கை என்பது குறளடி = 4,5,6 சிந்தடி = 7,8,9 அளவடி (நேரடி) = 10,11,12,13,14 நெடிலடி = 15,16,17 கழிநெடிலடி 18,19,20 ஆகிய எழுத்துகளை முறையே பெற்று அமையும். மேற்குறிப்பிட்ட எழுத்தெண்ணிப் பெறப்படும் அடிகளைப் பெறும் பாக்கள் தான் எழுத்துவகைப் பாக்களாக அடையாளப்படுத்தப்படுகிறது.

ஆசிரியப்பாவில் ஐவகை அடியும் வரும் (தொல்.செய்.50) என்று குறிப்பிட்டிருந்தாலும் இனிய ஓசை பெற வேண்டுமானால் வெண்சீர் ஆசிரியடியில் பயிலக் கூடாது என்று கூறி (தொல்.செய்.29) எழுத்துவகை ஆசிரியப்பாவினைத் தொல்காப்பியர் வரையறுக்கிறார். வெண்சீர் முழுவதும் பயிலும் நிலையில் நெடிலடி, கழிநெடிலடி அமைப்புகள்தான் உருவாகும். இந்நிலையில் எழுத்துவகை ஆசிரியப்பாவில் இந்த அடிகள் இடம்பெறாது என்பது பெறப்படுகிறது. சீர்வகை ஆசிரியப்பாவில் இவை இடம்பெறும். குறளடி முதல் கழிநெடிலடியில் கூறப்பட்ட ஐவகை அடிகளில் எழுத்துவகை வெண்பாவிற்குரிய அடிகளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது,

அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய

தளைவகை ஒன்றாத் தன்மை யான (தொல்.செய்.55)

அளவடிக்குரிய எழுத்தெண்ணிக்கையும் (10,11,12,13,14) சிந்தடிக்குரிய எழுத்தெண்ணிக்கையும் (7,8,9) வெண்பாவிற்குரியது. தளைவகை ஒன்றாத் தன்மை யான என்று கூறுவதால் இயற்சீர் வந்து ஒன்றாத நிலையிலே இந்த எண்ணிக்கையினை வெண்பா பெறும். மேலும் எழுத்துவகை வெண்பாவில் வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச் சீரும் பயிலாது என்று விளக்குகிறார்.  வெண்பா வுரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் இன்பா நேரடிக்கு ஒருங்குநிலை இலவே’ (தொல்.செய்.22) என்ற நூற்பாவில் ‘இன்பா என்று தொல்காப்பியர் எந்தப் பாவைக் குறிப்பிட்டார் என்பதில் உரையாசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இன்பா என்பதை இளம்பூரணர் வெண்பா என்றும் பேராசிரியர் ஆசிரியப்பா என்றும் கொண்டுள்ளனர். ‘இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே’ (தொல்.செய்.29) என்ற நூற்பாவில் ஆசிரியப்பாவில் இனிய ஓசை வர வேண்டுமானால் அதில் வெண்சீர் வரக்கூடாது என்று விளக்கும் தொல்காப்பியர் இன்பா என்பதை ஆசிரியப்பாவாகக் கூறியிருந்தால் ஒரே கருத்தைக் கூறியது கூறலாக இரண்டு நூற்பாக்களில் எடுத்துரைப்பதாகக் கொள்ள வேண்டிவரும். எனவே இன்பா என்பதை இளம்பூரணர் கூறியது போல வெண்பா என்று கொள்வதே சிறப்பானதாகும். வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் எழுத்தெண்ணி அடிவகுக்கும் நேரடியில் இடம்பெறும் போது வெண்பாவிற்குரிய எழுத்தெண்ணிக்கைக்குள் இந்தச் சீர்கள் அடங்காத நிலையை உருவாக்கி விடும். வெண்பாவில் வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் மட்டும் இடம்பெற்று எழுத்தெண்ணிக்கையில் நெகிழ்வு ஏற்படும் சூழலில் அதனைச் சீர்வகை வெண்பாவாக அடையாளப்படுத்தலாம். எனவே எழுத்துவகை வெண்பாவில் வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச் சீரும் பியலாது. சீர்வகை வெண்பாவில் இவை இடம்பெறும்.

எழுத்துவகைக் கலிப்பாவிற்குரிய அடிகளாகத் தொல்காப்பியர் சுட்டுவது (தொல்.செய்.56) ‘அளவடி மிகுதி என்று குறிப்பிடுவதால் அளவடியில் குறிப்பிடப்பெறும் 10,11,12,13,14 இந்த எழுத்துகளில் மிகுதி என்ற குறிப்பில் 13,14 என்ற எழுத்துகளைத் தொல்காப்பியர் குறிப்பிடுவதாகப் பேராசிரியர் கண்டுகாட்டுகிறார். மேலும் நெடிலடிக்குரிய 15,16,17 எழுத்துகளும் கழிநெடிலடிக்குரிய 18,19,20 எழுத்துகளும் எழுத்துவகைக் கலிப்பாவிற்குரியதாகத் தெளிவாகத் தொல்காப்பியர் சுட்டுகிறார். மேலும் எழுத்துவகைக் கலிப்பாவிற்குரிய சீர்களாக (தொல்.செய்.23)  வெண்பாவுரிச்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீரில் இரண்டான நேர்புநிரை, நிரைபுநிரை ஆகியவை மட்டும் வரும் என்று கூறிச் சீர்வகைக் கலிப்பாவில் பிற ஆசிரியவுரிச்சீர்கள் பயிலும் என்று இரண்டாகப் பிரித்துப் பேராசிரியர் எடுத்துரைக்கிறார். மேலும் இயற்சீர் பத்தில் தேமா, புளிமா கலிப்பாவில் பயிலாது என்று தொல்காப்பியர் (தொல்.செய்.24) சுட்டுகிறார். தேமா, புளிமா பயிலும் போது கலிப்பாவிற்குரிய மேற்குறிப்பிட்ட எழுத்தெண்ணிக்கை அமையாமல் போய்விடும் காரணத்தால் எழுத்தெண்ணி அடிவகுக்கும் எழுத்துவகைக் கலிப்பாவில் இடம்பெறாது என்றும் சீர்வகைக் கலிப்பாவில் இடம்பெறும் என்றும் புரிந்துகொள்ளலாம்.

வஞ்சிப்பா இருசீராலும் முச்சீராலும் நடப்பதால் இந்தப் பெயரீடுகளை அப்பாவடிவம் பெறமுடியாது என்பதை, ‘குறளடி முதலா அளவடி காறும்...’ (தொல்.செய்.54)  என்ற தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கிறது. நால்வகைப் பாக்களில் ஒன்றாகத் தொல்காப்பியர் வஞ்சிப்பாவைக் குறிப்பிட்ட நிலையில் எழுத்துவகைப் பாக்கள், சீர்வகைப் பாக்கள் என்ற இரண்டு பிரிவுகளிலும் வஞ்சிப்பா இடம்பெற வேண்டும் என்பதுதான் ஒழுங்கமைதி. நாற்சீர் கொண்ட அடியில் தான் மேற்குறிப்பிட்ட எழுத்தெண்ணிக்கை அமைந்த நிலையில் இருசீர்களும், முச்சீர்களும் பயிலும் வஞ்சிப்பாவில் எழுத்தெண்ணிக்கையை எப்படிப் பொருத்திக் காட்ட முடியும். நாற்சீர் கொண்ட அடி சிறப்பானது என்ற நிலையில் ஆசிரியம், வெண்பா, கலிப்பா ஆகிய மூன்று பாக்களிலும் மேற்குறிப்பிட்ட எழுத்தெண்ணி அமையும் சூழலில் வஞ்சிப்பாவிற்கும் எழுத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

வஞ்சிப்பா இரண்டு சீர்களைப் பெற்றும் (தொல்.செய்.43) சிறுபான்மை முச்சீராலும் வரும் (தொல்.செய்.45) என்று தொல்காப்பியர் இருசீர்களையும் முச்சீர்களையும் தான் வஞ்சிப்பாவிற் குரியதாக அடையாளப்படுத்துகிறார். அவ்வாறு அமையும் ஒரு சீரின் சிறுபான்மை எழுத்தெண்ணிக்கை மூன்றாகும். பெரும்பான்மை ஆறாகும் என்பதைப் பின்வரும் தொல்காப்பிய நூற்பாக்கள் விளக்குகின்றன. ‘நேர்நிலை வஞ்சிக் காறும் ஆகும்’ (தொல்.செய்.40), ‘தன்சீர் எழுத்தின் சிறுமை மூன்றே’ (தொல்.செய்.44).          

‘நேர்நிலை’ என்ற பாடம் சமநிலை வஞ்சிப்பாவைக் குறிப்பிடுவதாகப் பேராசிரியர் விளக்குகிறார். இந்நிலையில் எழுத்துவகை வஞ்சிப்பா என்பது சமநிலை வஞ்சிப்பாவான இரண்டு சீர்களைக் கொண்ட வஞ்சிப்பா என்பது பெறப்படுகிறது. அதற்குரிய எழுத்துகளாவன 6,7,8,9,10,11,12 என்று எழுத்துவகை வஞ்சிப்பாவை அடையாளப்படுத்தலாம். நாற்சீர் கொண்ட அடியில் உருவாகும் ஒரு சீரின் எழுத்தெண்ணிக்கை குறித்து, சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது (தொல்.செய்.40) என்ற நூற்பாவில் தொல்காப்பியர் விளக்கியதன் அடிப்படையில் வஞ்சிப்பாவிற்கும் சீரின் நிலையிலிருந்து எழுத்தெண்ணிக்கை பெறப்பட்டது. இதன் அடிப்படையில் நாற்பாக்களுக்குரிய எழுத்தெண்ணிக்கையினையும் தொல்காப்பியர் கூறியுள்ளார் என்பது புலனாகிறது. சீர்வகை வஞ்சிப்பாவில் பிற பாக்களுக்குரிய சீர்கள் இடம்பெறும்.

சீர்வகைப் பாக்கள் என்பது எழுத்துவகைப் பாக்களிலிருந்து நெகிழ்ந்து காணப்படுவது என்று ஒருவாறாகப் புரிந்துகொள்ளலாம். தொல்காப்பியர் ஆசிரியப்பாவில் வெண்பாவுரிச்சீர் பயிலும் என்றும் வஞ்சியுரிச்சீர் பயிலும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்று சில நூற்பாக்களின் வழியாக ஒரு பாவில் அதற்குரிய சீர்கள் பயில்வது தவிர பிற சீர்களும் பயிலும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு நெகிழ்ந்து பிற சீர்கள் பயிலும் நிலையில் சீர்வகைப் பாக்களாக அவற்றை உரையாசிரியர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.

இவ்வாறு அந்தந்தப் பாக்களுக்குரிய எழுத்தெண்ணிக்கையினையும் எழுத்தெண்ணிக்கைக்கு ஒத்த சீர் எண்ணிக்கையினையும் பெற்று அமையும் நிலையில் அது எழுத்துவகைப் பாக்களாக உருப்பெறும். நால்வகைப் பாக்களும் எழுத்துவகை அமைப்பில் இடம்பெறும் போது நெகழ்வின்றிச் செறிவான வடிவமாக உருப்பெறுவதை எழுத்தெண்ணிக்கையினையும் சீர் எண்ணிக்கையினையும் தெளிவாக வரையறுப்பதன் மூலம் உணரமுடிகிறது.

பாக்களுக்குரிய ஓசை

பிற்கால இலக்கணிகள் தளையை உறுப்பாகக் கொண்டு அதன் அடிப்படையில் ஓசையை வரையறுத்தனர். ஆனால் தொல்காப்பியர் தூக்கு என்பதைச் செய்யுளியல் உறுப்பாகக் கொண்டு தளையை உறுப்பாகக் கொள்ளாததை இங்கு இணைத்தெண்ண வேண்டும். தொல்காப்பியர் அடியை முன்னிறுத்தி ஓசையை வரையறுத்தார் என்று ஒருவாறு கூறமுடியும். எழுத்துவகை அடிகளில் உருவாகும் பாக்களில் தான் அந்தந்தப் பாக்களுக்குரிய செறிவான ஓசையைப் பெறமுடியும் என்றும் சீர்வகைப் பாக்களில் ஓசை நெகிழ்ந்து அமைய வாய்ப்புள்ளதையும் தெளிவுபடுத்தி விளக்குகிறார்.

தொல்காப்பியர் ஓசையை நால்வகையாகப் பாகுபடுத்த சங்கயாப்புடையார் ஒவ்வொரு பாவிற்கும் மூன்று உள்வகைகளைச் சுட்டுகிறார் (யா.வி.ப.247). தொல்காப்பியரின் ஓசை கோட்பாட்டைப் பிற்காலத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்தால் பாக்களுக்குரிய ஓசையில் தளை அடிப்படையில் உருவான பிற்கால ஓசை கோட்பாடு, அடியை முன்னிறுத்தி எழுந்த தொல்காப்பியரின் ஓசை கோட்பாட்டை மிஞ்சு நிற்கவில்லை என்றே கூறலாம். சான்றாக, திருக்குறளில் 1330 குறட்பாக்களைத் தளை அடிப்படையில் உருவான வெண்பாவின் மூவகை ஓசை பாகுபாட்டில் பிரித்து ஆராய்ந்தால் ஒரே ஒரு குறட்பா மட்டும் தான் ஏந்திசைச் செப்பலோசை பெற்று விளங்குகிறது. அந்தக் குறட்பா,

யாதானும் நாடாமல் ஊராமல் எவனொருவன்

சாந்துணையும் கல்லாத ஆறு (குறள்)

என்பதாகும். ஈற்றுச்சீர் தவிர்த்து ஏனைய சீர்கள் வெண்சீரால் பயின்ற நிலையில் உருவாவது ஏந்திசைச் செப்பலோசையாகும். தொல்காப்பியர் இவ்வாறு வெண்சீர் முழுவதும் பயிலும் நிலையில் அது வெண்பாவின் தன்மையில் நெகிழ்ந்து கலியோசை பிறக்க இடம்தருகிறது என்று கூறி அதனைச் சீர்வகை வெண்பாவாக அடையாளப்படுத்துகிறார். மேலும் பிற்காலக் காப்பியமான பாரத வெண்பாவை ஆராய்ந்த வையாபுரிப்பிள்ளை பாரத வெண்பாக்களில் பயின்றுவந்துள்ள காய்ச்சீர்களில் அமைந்த வெண்பாவின் ஓசையினைப் பின்வருமாறு பதிவுசெய்கிறார்:

                        மின்பயிலு மாமணிப்பூண் வேல்வேந்தர் தந்திறையை

                        முன்பொழுதே யந்தணர்க்கு முற்றுவித்தும் - பின்பொழுது

                        நேரிழையாள் தன்னொடு நேயமுடன் மெய்ச்சூதின்

                        போரடையத் தானடைந்தான் புக்கு

என்ற வெண்பாவைக் காண்க. உண்மையில் இதிற் காணும் ஓசை கலிப்பாவிற்குரிய ஓசையாம். பிற்காலத்தார் இங்ஙனம் கலியோசையை வெண்பாவிற்கு ஊட்டிச் செய்யுளை நெகிழச் செய்து வெண்பாவின் ஓசையினிமையைச் சிதைத்துவிட்டனர் (1991:212).

பிற்கால யாப்பிலக்கண நூல்களின் வழியாக இப்பாடலை ஆராய்ந்திருந்தால் வெண்சீர் முழுவதும் பயின்று வந்துள்ள இப்பாவில் ஏந்திசை செப்பலோசையே அவர் இனங்கண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர் கலியோசை பயில்வதாகக் கூற அடிப்படை காரணம் தொல்காப்பிய நெறிநின்று ஆராய்ந்ததேயாகும். வெண்பா இலக்கியங்களை முழுவதுமாக ஆராயும் நிலையில் அதில் ஏந்திசை செப்பலோசை என்று பிற்கால இலக்கணிகள் குறிப்பிடும் ஓசை பேரிடம் பெறுகிறதா அல்லது தொல்காப்பியர் குறிப்பிடும் எழுத்துவகை வெண்பாவில் பயிலும் செறிவான செப்பலோசை முதலிடம் பெறுகிறதா என்று ஆராய்ந்து நோக்கினால் உண்மை தெளிவுபெறும்.

இவ்வாறு வெண்பாவில் வெண்சீர் மட்டும் முழுவதும் பயின்ற நிலையில் அது சீர்வகை வெண்பாவாக அடையாளப்படுத்தப்படும் என்று பேராசிரியர், ‘தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா’ (தொல்.செய்.52) என்ற நூற்பாவில் வெண்சீர்க்கு வெண்சீர்வந்தொன்றுவது கட்டளையடி எனப் படாது சீர்வகை யடியாமென்பது பெற்றாம்’’ (தொல்.செய்.பேரா..298) குறிப்பிடுவதன் மூலம் அடியின் அடிப்படையில் உருவாகும் ஓசையின் நெகிழ்வு தன்மையே நால்வகைப் பாக்களையும் எழுத்துவகை பாக்களாகவும் சீர்வகைப் பாக்களாகவும் உரையாசிரியர்களை எடுத்துரைக்க தூண்டியது என்று கூறலாம்.

 

துணைநூற்பட்டியல்

 

1.    அமிதசாகரனார், யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையுடன், மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்தது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998.

2.    தொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், வெள்ளைவாரணன் (.), பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 1989.

3.    வையாபுரிப்பிள்ளை, எஸ்., தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம்,  மூன்றாம் தொகுதி, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், முதற்பதிப்பு, ஜனவரி 1991.

 

 

No comments: