Tuesday, June 14, 2011

புரிதல்களும் விலகல்களும்

புரிதல் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே ஒருவிதமான சிலிர்ப்பு உள்ளூக்குள் நுழையும். உன்னதமான உணர்வுநிலையில் தோன்றும். அன்புக்குரியவர்களின் அருகாமையில் உருவெடுப்பது. இவ்வாறு இதற்கான புனிதங்களைக் கட்டமைப்பர்.
உறவுகளின் மத்தியில் நட்பு வட்டாரத்தில் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று எளிதாக நம்மீது இந்தக் கேள்வியை முன்வைத்து செல்லும் நம் உறவுகளின் எண்ணிக்கை ஏராளம். நாமும் பிறரிடம் இந்தக் கேள்வியை முன்வைக்கும் தருணங்களும் உண்டு. இந்தக் கேள்வியைப் பிறரிடம் கேட்பது சுயநலத்தின் வெளிப்பாடு. புரிதல் என்பது என்ன? நம்மைப் பற்றிய குறிப்புரையா? அல்லது விளக்கவுரையா?
அவரவர் புரிதல்கள் அவரவர்களுக்கு என்ற நிலையில் தான்  நம்மைப் பற்றிய புரிதல்களை உருவாக்கும். ஒருவருக்கு நல்லவராக (தனக்குச் சாதகமான நிலையில் இருப்பவர்) இருப்பவரே மற்றொருவருக்கு கெட்டவராகக் (எதிர்நிலையில் இருப்பவர்) காட்சிதருவார். ஒரே நபர் இருவிதமாக வாழ்வது சாத்தியமா? இது அவரவர் புரிதல்களில் விளைந்த மதிப்பீடு.
புரிதல் என்ற ஒன்று உண்மையில் இல்லை. யாரும் யாரையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
புரிதல்கள் இன்றி விலகல்கள்  சாத்தியமில்லை. எனக்கான புரிதல் உன்னிடத்தில் இல்லை என்று யாரும் யாருடனும் நட்பு பாராட்டாமல் இருப்பதில்லை. தனக்கான தேவை குறையும் போது தானாக விலகல்கள் சாத்தியப்படும் தவிர, புரிதல் என்ற ஒன்று இல்லை என்ற காரணத்தினால் விலகல் சாத்தியப்படுவதில்லை. ஆனால் அன்பின் மீது பழியைப் போடும் வார்த்தையாக என்னைப் புரிந்துகொள்ளாத நபரிடம் நான் எப்படி நட்பு பாராட்டுவது என்ற அபத்தமான கேள்விகளை முன்வைத்து நகரும் வாழ்க்கை சூழல் தான் இன்று நிலவுகிறது. அன்பைப் பரிமாறிக்கொள்ளும் உணர்வுநிலை சார்ந்த சூழல் என்பது இன்று  குறைந்துகொண்டுவரும் காலத்தில் வாழ்ந்து கொண்டு நாம் இன்று புரிதல், பிரிதல் போன்றவற்றைப் பேசுவதுகூட அபத்தமாகத் தான் தோன்றுகிறது. பிரிவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை இழந்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு உலகம் சுருங்கியது உள்ளம் நெருங்கியது. ஆனால் பிரிவின் உணர்வைப் பெறாமல் வாழ்கிறோம். செல்பேசியின் உதவியில் பேசாத நேரமில்லை நடுகடலின் இந்த தொலைபேசியின் அலறல்கள் இன்றி வாழும் அமைதியின் நடுவில் உறவுகளை நினைக்கும் சுகம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது.  நகரங்களில் வாழ்ந்து கொண்டு வீட்டின் அறைகளுக்கு இடையே தொலைபேசியைப் பயன்படுத்தும் அவலச்சூழல். பேச்சுகளுக்கு வழிவிட்டு மௌனத்தில் உணர்வைப் பகிர்ந்துகொள்ள திராணியற்ற மனநிலையில் இன்று புரிதல்களும் பிரிவுகளும் வெற்றுச் சொற்களாகவே  எஞ்சிநிற்கின்றன.

No comments: