Sunday, June 19, 2011

தமிழ் யாப்பியல் குறித்த வையாபுரிப்பிள்ளையின் சிந்தனைகள்

            தமிழ்ப் பேராசிரியர்களுள் தனது பதிப்புகளாலும், ஆராய்ச்சித் திறனாலும் புலமையுலகில் தனக்கென ஒரு தனித்த இடத்தினை உருவாக்கி கொண்டவர் ச.வையாபுரிப்பிள்ளை. தமிழ்ச் செய்யுட்களுக்கு வெறும் பொழிப்புரை மட்டும் எழுதிக்கொண்டு அதையே பெரிய ஆராய்ச்சியாகக் கருதிப் பெருமை பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அறிவியல் முறையைப் பின்பற்றி, திறனாய்வு நோக்கில் இலக்கியங்களைக் கால முறையில் ஆராய்ந்தவர். இவரது இலக்கணப் புலமையில் குறிப்பாக யாப்பிலக்கணப் புலமைத் தமிழிலக்கிய ஆராய்ச்சிற்கு எவ்விதம் பயன்பட்டது என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
இலக்கியங்கள், இலக்கணங்கள், நிகண்டுகள் எனப் பல துறை சார்ந்த நூல்களையும் பதிப்பித்துள்ளார். நாமதீப நிகண்டு முதலான ஆறு நிகண்டு நூல்களையும், தொல்காப்பியம் முதலாக நான்கு இலக்கண நூல்களையும், சங்க இலக்கியம் முதலாக ஏழு இலக்கிய நூல்களையும், சாத்தூர் நொண்டி நாடகம் முதலாக மூன்று நாடகங்களையும், இராஜராஜதேவருலா முதலாகப் பதிமூன்று சிற்றிலக்கியங்களையும் இவர் பதிப்பித்துள்ளார். இவருடைய ஒவ்வொரு பதிப்பிலும் நூல் குறித்து, நூலாசிரியரின் காலம், சமயம் குறித்து ஆராய்ச்சி நோக்கில் எழுதப்பட்டுள்ள முன்னுரைகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகின்றன.
நம்முடைய இலக்கியங்கள் செய்யுட்களால் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை பதிப்பிக்க யாப்பறிவின் தேவை இன்றியமையாததது. வையாபுரிப்பிள்ளையின் யாப்பியல் புலமை குறித்து அவருடைய பதிப்புகளின் வாயிலாகத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.
ஆராய்ச்சிமுறை
      தமிழிலக்கிய உலகில் வையாபுரிப்பிள்ளையின் ஆராய்ச்சி குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
வையாபுரிப்பிள்ளை வடமொழிச் சார்பாளர் அதன் வழித் தமிழை நோக்கியவர்.
அவர் தமிழிலக்கியத்தை அறிவியல் வழி நின்று ஆராய்ந்து, அறிவியல் ஆய்வுமுறையினைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் (வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுநெறி, முன்னுரை, 1989:9).
தாம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளுக்கு அகச்சான்றுகளையும், புறச்சான்றுகளையும் துணையாகக் கொண்டார். மொழிநடை, வரலாற்றுக் குறிப்புகள், பிற நூல்களுடன் கருத்தொற்றுமை என அகச்சான்றுகள் மூன்று வகையும், ஏனைய தமிழ் நூல்களில் வரும் குறிப்பு, கல்வெட்டுகள், பிற நாட்டார் குறிப்புகள் எனப் புறச்சான்றுகளும் மூவகைப்படும். பேராசிரியர் தமது ஆராய்ச்சிக்கு அகச்சான்றுகளையே பெரிதும் மதித்துள்ளார் எனக் கருதவும் இடமுள்ளது.

நூல் பதிப்பு என்னும் கலையை அறிவியல் அடிப்படையில் கோட்பாடுகளுடன் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். கல்வெட்டுகள், செப்பேடுகள், மொழியமைப்பு மரபுகள், அரசியல், சமுதாய வரலாறுகள் போன்ற பல்துறைப் புலமையைப் பின்புலமாகக் கொண்டு பதிப்புக்கலைக்கு ஓர் ஆய்வுநெறியை அமைத்துக் கொடுத்தவர் ( அ.அ. மணவாளன், பேராசிரியரின் பதிப்புப்பணி, இலக்கிய உதயம் 1991:372).
பதிப்புத்துறையில் ஈடுபடுவோர்க்கு தமிழ்ச் செய்யுள் குறித்த புலமை என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை வையாபுரிப்பிள்ளை பின்வரும் உதாரணத்துடன் விளக்குகிறார்.
தமிழில் ஏடுகளில் எழுதப்பட்டிருப்பனவற்றை வாசிப்பதே மிக்க சிரமமான வேலையாகும். உதாரணமாக பொன் என்பதை எடுத்துக்கொள்வோம். இதனைப் பொன் என்றும் போன என்றும் பேரன் என்றும் வாசிக்கலாம். ஏடுகளில் இதை நிச்சயப்படுத்துவது என்றால் பொருளுணர்ச்சியும் செய்யுளோசையுணர்ச்சியும் இருந்தாலன்றி இயலாது (தமிழ்ச் சுடர்மணிகள், 1991:196).
என்று கூறுவதன் மூலம் பதிப்பிற்கு யாப்பறிவு தேவை என்பதை வையாபுரிப்பிள்ளை வற்புறுத்துவதை அறிய முடிகிறது.
யாப்பியல்
கட்டுகை, கட்டு, செய்யுள், பொருத்தம் எனப் பொருளுடைய யாப்பு என்னும் சொல் (பார்க்க: தமிழ் பேரகராதி - தொகுதி 6, 19 :3400), செய்யுள் வடிவத்தின் உட்புறக் கூறுகளை உணர்த்தும் பாங்கைத் தெரிந்துகொள்ளும் முயற்சி இங்கு யாப்பியல் என்பதில் அமைகின்றது. இவ்வாறு  வையாபுரிப்பிள்ளை பதிப்பித்துள்ள தமிழ் பேரகராதியில் யாப்பு என்ற சொல்லிற்குத் தரும் விளக்கம் சிறப்பான நிலையில் நின்று பொருள் உரைக்கிறது எனலாம்.
யாப்பியல் ஆய்வின் பயன்கள்
            காலந்தோறும் மாறும் தன்மையுடைய மொழி அமைப்பில் இலக்கியங்களிலும் பல மாறுபாடுகள் நேர்கின்றன. தமிழ் இலக்கணங்களில் ஒன்றான யாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிந்துகொள்ளுவதன் மூலம் இலக்கிய வடிவ மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இலக்கியங்களில் யாப்பியல் ஆய்வு மேற்கொள்ளும் போது சில உண்மைகள் வெளிப்படுகின்றன. 
·         சரியான பாடங்களை உறுதிசெய்தல்
·         பாவடிவங்களை அறுதியிடுதல்
·         இடைச்செருகல்களை இனங்காணுதல்
என்று யாப்பியல் ஆய்வின் பயன்களாகக் கம்பன் பாடிய வண்ணங்கள் என்ற நூலில் இரா. திருமுருகன் இந்த மூன்று கூறுகளைப் பட்டியலிடுகிறார். வையாபுரிப்பிள்ளை யாப்பறிவின் துணையோடு ஆராய்வதால் தாம் பதிப்பித்துள்ள நூல்களில் பாடவேறுபாடுகள் குறித்தும் பாவடிவங்கள் குறித்தும் தெளிவான முடிவுகளைச் சொல்லி செல்கிறார்.
பாடவேறுபாடுகளைக் கண்டறிதல்
நான்மணிக்கடிகைப் பதிப்பின் முன்னுரையில் ஒரு பாடலின் உண்மை பாடத்தைத் தெளிவுப்படுத்தியுள்ளதைக் கூறலாம்.  நான்மணிக்கடிகைக்குச் சிறந்த பதிப்பாக ரா. இராகவையங்கார் செந்தமிழ்ப் பிரசுரமாக மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட பதிப்பினைக் குறிப்பிட்டு, இப்பதிப்பில் சில திருத்த வேண்டிய இடங்கள் உள்ளன என்று கூறிச் சான்றுக்கு ஒரு பாடலைக் காட்டுகிறார்.
ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்
நன்றூக்கல் அந்தண ருள்ளம் பிறன்ஆளும்
நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல்.
ஒரு சிறந்த பதிப்பிலே இந்தத் தவறான பாடம் காணப்படுகிறது என்று கூறி இதனைத் தெளிவுப்படுத்துகிறார்.
நன்றூக்கல் என்பதில் எதுகை நயம் இருக்கிறது. ஆனால் முந்தியசீர் மாச்சீராக இருத்தலால் வெண்பாவிற்குரிய தளை தட்டிவிடுகிறது. எனவே இது பிழை என்பதில் சிறிதும் ஐயமில்லை. இச்செய்யுளின் உரையில் நன்றூக்கல் என்பது அறத்தினையே முயன்றொழுகுதல் என விளக்கப்படுகிறது. எனவே பழைய உரையும் இப்பாடம் பிழையெனக் காட்டிகின்றது. இச்செய்யுளில் முதலடியும், மூன்றாமடியும் முறையே ஒன்று... நன்று, நாடூக்கல்... கேடூக்கல் என ஒரூஉ தொடையாக அமைந்திருத்தலால் இரண்டாம் அடியும் அவ்வாறு அமையவேண்டுமெனக் கருதலாம். இக்காரணங்களால் அறனூக்கல் என்பது பாடமாயிருக்க வேண்டும் என ஊகிக்கலாம். இப்பாடத்தில் தளை தட்டவில்லை, பழைய உரையும் பொருத்தமுடையதாகிறது, ஒரூஉ தொடையும் நன்கு அமைந்து செய்யுளின் இனிமை மிகுகின்றது. இவ்ஊகத்திற்கேற்ப, ஏட்டுப்பிரதிகளிலும் இப்பாடமே காணப்படுகிறது.  1901-ல் வெளிவந்த தமிழ்ச் செல்வப் பதிப்பிலும் இந்தப் பாடமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அறனூக்கல் என்பதே உண்மைப்பாடம் (நான்மணிக்கடிகை, முன்னுரை, 1944:10).
என்று விளக்குகிறார். பேராசிரியர் யாப்பிலக்கணத்தில் கைவரப் பெற்றவர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும்.
பா வடிவங்களை அறுதியிடல்
வையாபுரிப்பிள்ளை தமிழ்ப் பாக்களின் வடிவத்தை நிர்ணயிக்கும் கூறுகளாகச் செய்யுளோசையும், பொருளும் விளங்குவதாக எடுத்துரைக்கிறார். வசனமாக வெண்பா இடம்பெற்று இருந்தாலும், அதனைச் சரியாக இனம்காணும் ஆற்றலைப் பெற்றவராக வையாபுரிப்பிள்ளை விளங்குகிறார் என்பதற்குச் சான்றாக அவர் இறையனார் அகப்பொருள் நூலின் காலத்தை நிர்ணயிக்கும் போது, நன்னூலில் வரும் வெண்பா (23), இறையனார் அகப்பொருளுரையில் (பக்.16) வசனத்தில் வந்துள்ளதை எடுத்துக்காட்டி இறையனார் அகப்பொருளின் காலத்தை கி.பி 1260-ல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் (காவிய காலம், 1991:185) என்று கூறியுள்ளார்.  

குண்டலகேசி நூலின் பா வடிவத்தினைக் குறிப்பிடுகையில் இப்பெருநூலுக்குக் குண்டலகேசி விருத்தம் எனப் பெயருண்டென்பதும் இதிற் கலித்துறைகள் வந்துள்ளன என்பதும், இவ்வீரசோழிய உரையினாலே புலனாகின்றன. மேலும், வீரசோழிய உரையில் இடம்பெற்ற ஒரு செய்யுள்  குண்டலகேசி காவியத்திலிருந்து உரையாசிரியர் சான்று காட்டியிருக்க வாய்ப்பிருப்பதாகக் காவிய காலத்தில் வையாபுரிப்பிள்ளை ஊகித்து எடுத்துரைப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
பா வடிவங்களின் கால ஆராய்ச்சி
கால ஆராய்ச்சியின் இன்றியமையாமையை நூல் தோன்றிய காலத்தை அறிந்தாலன்றி அந்நூலிலுள்ள கருத்துக்களை நாம் முற்றிலும் அறிந்து கொள்ள முடியாது. இலக்கிய சரிதமும் அறிந்து கொள்ளமுடியாது என்று கால ஆராய்ச்சியின் தேவையைத் தெளிவாக விளக்குகிறார்.
பா வடிவங்களின் கால ஆராய்ச்சி குறித்து  சில கருத்துக்களை முன் வைக்கிறார். விருத்தக்கவித் திறங்களெல்லாம் சுமார் கி.பி.7ஆம் நூற்றாண்டளவில் தோன்றியவை (புறநானூறும் தமிழரும் ப. 7) என்றும், அகப்பொருளுக்குச் சிறப்புரிமையுடையதாகப் போற்றப்பட்டுள்ள கட்டளைக் கலித்துறையும் பிற்காலத்துப் புதிதாய்ப் புகுந்தது (புறநானூறும் தமிழரும் ப. 7) என்றும் ஆராய்ந்துரைக்கிறார்.
தொல்காப்பியம் குறிப்பிடும் பண்ணத்தியைப் பற்றி வையாபுரிப்பிள்ளை, பண்ணத்தி முதலிய பல செய்யுள் நூல்கள் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே வழங்கொழிந்தன (புறநானூறும் தமிழரும், ப.8) என்று கூறுவதன் மூலம் அவர் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வடிவமாகப் பண்ணத்தியை இனங்கண்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. மேலும் ஜைனர்களின் பூர்வீகச் செய்யுள் வகையொன்றின் பெயரான ப்ரக்ஞ்ப்தி என்பது பாகவதச் சிதைவாகப் பண்ணத்தி எனத் தமிழில் வந்துள்ளதென்றும், பாகதநூல்களில் காணப்படும் செய்யுள் வகையின் இலக்கணத்தைத் தமிழ்ச்செய்யுள் வகைக்குச் சார்த்தித் தொல்காப்பியர் கூறியுள்ளாரென்றும் வையாபுரிப்பிள்ளை பண்ணத்தி யாப்பு வகைப்பற்றிக் குறிப்பிடுகின்றார் (தமிழ்ச்சுடர்மணிகள், 1991:18).
காலந்தோறும் பாவடிவங்கள்
தமிழிலக்கிய நெடும்பரப்பில் பயின்றுவந்துள்ள பாவடிவங்கள் குறித்து தமிழ்ப் பாட்டும் இசையும் என்ற கட்டுரையில் வையாபுரிப்பிள்ளை விரிவாக எடுத்துரைக்கிறார். காலந்தோறும் சிறப்பு பெற்றுள்ள பாவடிவங்கள் எவையெவை என்பதைச் சுட்டிகாட்டி அவற்றின் சிறப்புக் கூறுகளை விதந்தோதுகிறார்.
தமிழ்ப் பாட்டு வரலாற்றில் சங்க செய்யுட்கள் அகவல் என்ற பாவினத்தாலானது. இந்தப் பாவினத்திற்குத் தனித்து உரிய ஓர் ஓசை உண்டு எனினும் இசையோடு பாடுதற்கு இப்பாவினம் தக்கத்தன்று என்றும் அடிகளுக்கு வரையறை இல்லாமையே இதற்குக் காரணம் என்றும் கருத்துரைக்கிறார். இருப்பினும் அகவல் சிறந்து விளங்க காரணம் சொல்லின் இனிமையாலும், சொல், தொடர்களின் நயத்தினாலும் அடிகளின் ஒத்திசைப்பினாலும் (Rhythm), பொருளின் நயத்தினாலுமே இவ்வகைச் செய்யுட்கள் சிறந்து விளங்கின (உரைமணிமாலை, 1952: 56)
என்று எடுத்துரைக்கிறார்.
வெண்பா குறித்து குறிப்பிடுகையில், அகவலுக்குப் பின்பாக வெண்பா தோன்றியது என்று கொள்ளலாம். இது பெரும்பாலும் நான்கு அடிகளை உடையது. இதற்கு உரியது செப்பலோசை. இந்த ஓசையோடு தளைக்குரிய நியமங்களும் சேர்ந்து, இவ்வகைச் செய்யுட்கள் இயலுகின்றன இவற்றை இசையோடு சேர்த்துப் பாடுதற்குப் பெரிதும் ஏற்புடைமை உண்டு (உரைமணிமாலை, 1952:57) என்று கூறுகிறார்.
மேலும் வெண்பாவின் பின்வந்தது கலிப்பாவின் ஒரு பகுப்பாகிய தாழிசை. இது பாடுதற்கெனவே அமைந்தது எனலாம். தாழிசை என்ற பெயரே இதனை விளக்குகின்றது. கலிப்பாவிற்குரிய முரற்கை (தொல்.பொருள்.382) என்ற பெயரும் இதனையே வலியுறுத்தும். முரற்கை என்பது ஒலித்தல் என்று பொருள்படும். இசை முரலுதல் என்றல் முற்காலத்து மரபு கலி.9 (உரைமணிமாலை, 1952: 57). இசையை முழுமையாக உள்வாங்கிய பாவடிவமாகப் பரிபாடல் விளங்குவதாக வையாபுரிப்பிள்ளை கூறுகிறார். ஆசிரியப்பா தவிர மற்றவற்றில் பாடுதற்கு ஒத்த ஓசை இயல்பாகவே அமைந்துள்ளது (உரைமணிமாலை, 1952:58) என்று கருத்துரைக்கிறார். மேலும் கால அடைவில் இசைக்கலையானது மிகவும் வளம் பெறலாயிற்று. அந்நிலையில் பாடல்களிற் சிலவற்றிற்கு இசையூட்ட பெற்றது. பரிபாடல் இதற்குத் தக்க உதாரணமாகும் (உரைமணிமாலை,1952:58) என்று பரிபாடல் இசை நிரம்பிய வடிவம் என்பதையும் உறுதிசெய்கிறார்.
பக்தி இலக்கிய காலத்தில் இசைக்கு எனவே பாடல்கள் இயற்றப்பெற்றன.தேவாரம் முதலிய திருப்பாட்டுக்கள் அனைத்தும் இவ்வாறு பண்களுக்கு எனப் பாடப் பெற்றன.பிற செய்யுள் வகைகளும் கூட இசையோடு இனிமையாகப் பாடுதற்கு ஒத்தனவாக இருக்க வேண்டும்.இதன் விளைவாக ஆசிரிய விருத்தம் முதலிய செய்யுள் வகைகள் தமிழாசிரியர்களால் கையாளப்பட்டன.சிந்தாமணி முதலிய காவியங்களின் விருத்தங்கள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன (உரைமணிமாலை, 1952:58-59) என்று விருத்தம் பாடப்பெற்ற சூழலைக் குறித்து விளக்குகிறார்.
இலக்கியங்களில் பொருண்மையும் ஓசையும் சிறப்பாக ஒத்திசையும் போது முழுவதும் ஒரே பா வடிவத்தைக் கொண்டு இயற்றப்படும். இதற்குச் சான்றாகச் சில பாக்களை எடுத்துரைக்கிறார். தாழிசை பாடுதற்கு அமைந்த பெருஞ்சிறப்புக் காரணமாகவே தனிப்பட்ட நூலுக்குரிய யாப்பாகக் கொள்ளப்பட்டது. கலிங்கத்துப்பரணி இதற்குச் சான்று எனவும், குறள்வெண்செந்துறையும் இசையோடு பாடுதற்கு ஏற்றதாக ஆசிரியர் சுந்தரம்பிள்ளையால் சிவகாமிசரிதத்தில் கொள்ளப்பட்டது (உரைமணிமாலை, 1952:59) எனவும் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.
பாவினங்களில் பெருவழக்காகப் பயன்படும் விருத்தம் கம்பராமாயணத்தில் சிறந்து விளங்கியது. கம்பர் பயன்படுத்திய விருத்தம் பற்றிக் குறிப்பிடுகையில்,
இசையின் இனிமைக்கும், செய்யுளின் இனிமைக்கும், பொருளின் இனிமைக்கும் பேரெல்லையாக உள்ளது கம்பராமாயணம். அதிலே உள்ள விருத்தங்கள் செம்பாக நடையிற் சென்று தமிழ் மக்களுடைய பேச்சில் இயற்கையாயுள்ள ஒத்திசையோடு (Rhythm) அமைந்திருக்கின்றன. அக்காலத்துப் பெரும்பான்மையான மக்கள் வழங்கிய சொற்கள் இவ்விருத்தங்களில் மிகுதியாகக் காணலாம். தமிழ் கற்ற பெரும்புலவர்களேயன்றி சாதாரண மக்களும் ஓதியுணர்ந்து இன்புற வேண்டும் என்பது கம்பர் கருத்து.  அதற்கேற்ப பல முறைகளும் கையாளப்பட்டுள்ளன (உரைமணிமாலை, 1952:60)
என்று வையாபுரிப்பிள்ளை கூறுவதன் மூலம் விருத்தம் என்ற பாவடிவம் பேச்சு வழக்கினை அதிகமாக உள்வாங்கும் பாங்கில் அமைந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. மேலும் காவியங்களின் யாப்பாக விருத்தம் இருப்பதனையும் சுட்டிச் செல்கிறார்.
செய்யுளினங்களும் ஒவ்வொரு காலத்துள்ள வழக்கிற்குப் பொருந்த அமைவனவாகும். சிலப்பதிகாரம் தோன்றிய காலத்தில் அகவற்பாவே காவியங்களுக்குரியதாகக் கருதப்பட்டது.சிறிது பிற்பட்டுத் தோன்றிய காவியங்களில் அகவற்பா கொள்ளபடவில்லை.விருத்தங்கள் கையாளப்பட்டன.கம்பராமாயணம் முதலிய இதிகாசத்தால் காவியங்களுக்கும் இதிகாசங்களுக்கும் உரியன விருத்தப்பாக்களே என்ற கொள்கையேற்பட்டுவிட்டது (காவியகாலம், 1991: 248).
சிந்து, கும்மி, பள்ளு, குறவஞ்சி பற்றிக் குறிப்பிடும் போது கற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட வடிவம் என்றும் பொது மக்களின் இசையின் உணர்ச்சியால் தோன்றிய செய்யுட்கள் இவை (உரைமணிமாலை, தமிழ்ப் பாட்டும் இசையும், 1952:62) என்றும் குறிப்பிடுகிறார். இதன்மூலம் இவ்வகைச் செய்யுட்களைப் புலவர்கள் கையாளுவதில் விருப்பம் கொள்ளவில்லை என்பது புலப்படுகிறது. இருப்பினும் இவ்வகைச் செய்யுள் வடிவங்கள் மக்கள் மத்தியில் வழக்குப் பெற்றதற்கான காரணத்தை ஆராய்ந்து எடுத்துரைக்கிறார்.
இசையின் கதியை உணர்த்தும் மெட்டு என்று இக்காலத்தில் சொல்லப்படுவதனை அடிப்படையாகக் கொண்டு இச்செய்யுள் வகைகள் இயற்றப்பட்டுள்ளன என்றும் இச்செய்யுளில் உள்ள இராகம், பாவம், வடிவம் என்ற இம்மூன்றும் கலந்து இச்செய்யுள்வகை அனைவரையும் மோகங்கொள்ளும்படியாகச் செய்தது என்றும் கீர்த்தனம் என இச்செய்யுள் வகையைக் கூறுவது பொருந்தாது (உரைமணிமாலை, 1952:63-64)
மேலும், கீர்த்தனையில் இராகமும் தாளமுமே பிரதானம். அதன் பொருளை அத்துணை விசேஷமாகக் கீர்த்தனாச்சாரியர்கள் கொள்ளவில்லை (உரைமணிமாலை, 1952:64) என்று எடுத்துரைத்து சிந்து, கும்மி, பள்ளு, குறவஞ்சி இவற்றிலிருந்து கீர்த்தனை எந்த இடத்தில் வேறுபடுகிறது என்பதை விளக்கமாகச் சுட்டிகாட்டுகிறார்.
காப்பியக் கலித்துறை
            வையாபுரிப்பிள்ளை தம் காவிய காலம் என்னும் நூலில் காவியங்களின் பொருண்மை, வடிவம் குறித்து நுண்ணிய புலமையோடு ஆராய்ந்து விளக்கியுள்ளார். சிந்தாமணியின் வடிவம் சார்ந்து விளக்குமிடத்தில் அதில்  பயின்றுவந்துள்ள பாவினத்தை எடுத்துரைப்பதோடு மட்டுமின்றி யாப்பிலக்கண வரலாற்றில் இதன் இடம் குறித்தும் தெளிவுப்படுத்துகிறார்.
கலித்துறை வடிவம் குறித்து, மேற்காட்டிய செய்யுள் வகைகளேயன்றி ஒருவகைப் பாவினம் தாம் இயற்றும் காப்பிய வகைகளுக்கென்றே சிந்தாமணியாசிரியர் முதலியோர்களால் புதுவதாக வகுக்கப்பட்டது. இவர்கள் காலத்திற்கு முன்பு இப்பாவினம் வழங்கியதாகத் தெரியவில்லை. இது கலித்துறை வகைகளுள் ஒன்று,
                        நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை  
என்பது யாப்பருங்கலம் நெடிலடி என்பது ஐந்து சீர்களால் வருவது. இக்கலித்துறை வகையைக் குறித்து யாப்பருங்கல விருத்தியுரைகாரர் சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்றிவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவன. அவற்றுள் நேரசை முதலாய்வரின் ஓரடி பதினான்கெழுத்தாம். நிரையசை முதலாய்வரின் ஓரடி பதினைந்தெழுத்தாம். பிங்கலகேசியின் முதற்பாட்டு இரண்டாமடி ஓரெழத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்ந்தார். அல்லனவெல்லாம் ஓக்கும் என்றெழுதினார். இவர் கருத்தின்படி இக்கலித்துறை வகை வண்ணத்தான் வந்ததாம். உதாரணமாகச் சிந்தாமணி காப்புச் செய்யுள் வழங்கியுள்ளதை எடுத்துரைத்து காப்பியத்திற்கென்றே இயற்றப்பட்டு, காப்பியங்களிலே வழங்கி வந்தமையால் இதனைக் காப்பியக்கலித்துறை என்று வீரசோழியவுரை பெயரிட்டுள்ளதாகக் (காவியகாலம்,1991:154-155) குறிப்பிடுகிறார்.
கட்டளைக்கலித்துறை
கயாதரம் பதிப்பின் முன்னுரையின் இப்பாவினம் குறித்து பேராசிரியர், இவ்வகைப் பாவினம் தமிழுலகில் முற்காலத்தில் பெருவழக்காக இருந்தது. யாப்பருங்கலக்காரிகை முதலிய நூல்களும், எண்ணிறந்த கோவைகளும் இதற்குச் சான்று பகர்வன. இனிய ஓசையும், எண்ணினால் வரையறைப்பட்ட எழுத்தமைதியும், எதுகை, மோனை முதலியவற்றின் நயமும், இவ்வகைச் செய்யுட்களைக் கற்போருக்குப் பெருவிருந்தாய் அமைந்தன. இந்நயங்களையெல்லாம் உட்கொண்டு, ஞாபகத்தில் வைத்தற்குத் தக்கதொரு செய்யுளினமெனக் கருதி, கட்டளைக் கலித்துறையில் மகடூஉ முன்னிலையாகக் கயாதரர் தமது நிகண்டு நூலினை இயற்றினார் (காயதரம், 1939:16). இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் கட்டளைக் கலித்துறை வடிவம் மனனம் செய்ய உகந்ததாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும் கட்டளைக் கலித்துறை வடிவம் அகப்பொருள் பாடுவதற்குச் சிறந்த வடிவம் என்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.
ஒப்பிலக்கியப் பார்வை
தமிழ் மொழியின் செய்யுள் வடிவங்களாக விளங்கும் பாக்களின் சிறப்பினைப் பிறமொழி இலக்கியங்களோடு ஒப்பிட்டு,  இவ்வகையான பா வடிவங்கள் பிறமொழிகளில் இல்லை என்றும் இவை தமிழ் மொழிக்கே உரிய தனித்த சிறப்பான பாக்களாகத் திகழ்கின்றன என்றும் கூறுகிறார்.
தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள் வடமொழியிலக்கணங்களைப் பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோவெனின், தமிழிற்கே சிறந்துரியவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களிற் காணப்பெறாதவாயுள்ள இலக்கணமைந்த செய்யுள் வகைகளால் இயன்றுள்ளன. அகவற்பா, கலிப்பா, வெண்பா முதலியன தமிழிற்கே தனித்துரிய செய்யுள் வகைகளாம். இவைகள் தமிழ் மக்களது கருத்து நிகழ்ச்சிக்கும் தொன்றுதொட்டு வந்த வழக்கு நிரம்பிய தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசையினிமைக்கும் பொருந்துமாறு அமைந்தன. தமிழிற்கே தனியுரிமையென முத்திரையிடப் பெற்று வெளிப்போந்து வீறுற்று உலவின (இலக்கியச் சிந்தனைகள், 1998:205).
இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் தமிழ்மொழியின் ஆதிஇலக்கியங்கள் பொருண்மையில் மட்டுமன்றி வடிவம் சார்ந்தும் தனித்து நிற்பதை வையாபுரிப்பிள்ளை எடுத்துரைப்பதை அறிய முடிகிறது.
வடமொழி புலமைபெற்ற இவர் வேதங்களைப் பற்றி ஆராய்ந்தபோது ரிக்வேதத்திலுள்ள செய்யுள்களைப் பற்றி குறிப்பிடுகையில் ஒரு செய்யுளை எடுத்துக்காட்டி (ரிக்.மி,146), இச்செய்யுள் தொல்காப்பியர் கூறும் பிசி என்னும் வகையைச் சார்ந்தது. இது போன்ற புதிர்கள் முற்காலத்தில் பல தேசத்து இலக்கியங்களிலும் காணப்படுகின்றன (இலக்கிய உதயம், 1991:124) என்று கூறுகிறார். இவ்வாறு தமிழிலுள்ள வடிவங்களைப் பல்வேறு தேசங்களில் வழங்கும் மொழிகளின் வடிவங்களோடு ஒப்பிடுவதற்கான களத்தை அமைத்துத் தருகிறார்.
இசைத்தமிழ்ச் செல்வர் இலக்குமண பிள்ளை குறித்து எழுதியுள்ள கட்டுரையில் வையாபுரிப்பிள்ளை,
அவர் நாடகத்தை மொழிபெயர்க்கும் போது அம்மொழியில் உள்ள செய்யுள் அமைப்பிற்கேற்ப தமிழ்மொழியில் உள்ள செய்யுள் வடிவத்தினைப் பயன்படுத்த எண்ணி அதற்குச் சரியான வடிவம் தமிழில் இல்லை என்றும் கட்டளைக்கலித்துறையை எதுகை மோனைகளை நீக்கி அமைத்துள்ளார். இயல் தமிழ் நூல்கள் இயற்றியதோடு நாடக நூல்களும் இவர்கள் எழுதியுள்ளார்கள். கிரேக்க மொழியிலுள்ள பைலாக்டெட்டிஸ் (Philoctetes) என்ற நாடகத்தை, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பின்பற்றி வீல நாடகம் என்ற பெயரால் தமிழில் எழுதியிருக்கின்றனர். ஆங்கிலத்திலுள்ள அயாம்பிக் பெண்டாமீட்டர் (lambic pentametre) என்பதற்குச் சரியான தமிழ்ச் செய்யுள் வகை இல்லை என்று கருதித் தமிழிலுள்ள கட்டளைக் கலித்துறையை எதுகை, மோனைகளை நீக்கி இந்நாடகத்தில் அமைத்துள்ளார். இது ஒரு புது முயற்சி இதனால் இலக்கிய மரபுகளில் புதிய முறைகளைக் கையாள வேண்டும் என்னும் கருத்து பிள்ளையவர்களுக்கு உண்டென்பது விளங்குகின்றது (தமிழ்ச் சுடர்மணிகள், 1991:  257)
என்று கூறுகிறார். இதன்மூலம் மொழிபெயர்க்கும்போது நாம் பொருண்மையில் மட்டும் கவனம் செலுத்துவதுடன் வடிவம் சார்ந்தும் சிந்திக்க வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு இலக்குமண பிள்ளையின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.
வையாபுரிப்பிள்ளை காலத்தில் யாப்பின் நிலை
யாப்பியல் அழகோடு செய்யுள் இயற்றுவோரைக் குறித்து, பாடுவோருள் ஒரு சிலர் யாப்பிலக்கணந் தவறாதபடி ஒழுங்காக யாப்புக்கள் புணர்க்கிறார்கள். இவ்வகை யாப்புக்கள் எலும்புச் சட்டகம் இயங்கிச் செல்வது போன்றிருக்கும் (இலக்கிய மணிமாலை, 1954, ப. 45) என்று கூறுகிறார்.
வையாபுரிப்பிள்ளை தம் காலத்தில் வழங்கிய யாப்பின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டுள்ளார் என்பதைப் பின்வரும் அவரின் கூற்றின் வாயிலாகவே அறியலாம்.
தமிழிற் கவிதையும் ஒரு சிலர் எழுதுகின்றார்கள். ஆனால் இவர்கள் புனையுங் கவிதையில் தமிழ்ச் செய்யுளுக்கு இன்றியமையாத இலக்கண அமைதிகள் காணமுடியவில்லை. சில போது இவர்கள் எழுதுவது என்ன பாஷையோ என்று நாம் ஐயுறத்தக்க நிலைமையில் இருக்கும். எலும்புச் சட்டகமின்றித் தசைபிண்ட மாத்திரம் நேர்நின்று இயங்க முயல்வது போன்று இவர்கள் முயற்சி முடிகின்றது. ஆகவே கவிதையென்னும் கவின்கெழுசெல்வி
                        கன்ம ருங்கெழுந் தென்றுமோர் துளிவரக் காணா
                        நன்ம     ருந்துபோல்       நலனற உணங்கிய நங்கையாய்த்
தமிழ்நாட்டில் இக்காலத்தில் உள்ளாள் (இலக்கிய மணிமாலை, 1954:45).
அவர் காலத்தில் செய்யுளிலக்கணத்தில் இருந்து விலகி வந்த கவிதைகளைக் குறித்து இவ்வாறு விமர்சிப்பதன் மூலம் வையாபுரிப்பிள்ளை தமிழ்ச் செய்யுள் மரபின் மீது  கொண்டிருந்த மதிப்பு வெளிப்படுகிறது. மேலும் அதன் வடிவம் சார்ந்த தன்மையைச் சரியாக உள்வாங்காமல் கவிதை இயற்றுவோரைப் போலிப் புலமையாளர்கள் என்றும் சாடுகிறார்.
வையாபுரிப்பிள்ளையின் முரண்கள்
வையாபுரிப்பிள்ளையின் புலமைசெயல்பாடு சிறந்த முறையில் விளங்கியதையும், யாப்பியல் குறித்த அவருடைய சிந்தனைகள் குறித்தும் மேற்குறிப்பிட்டதன் வாயிலாகத் தெளிவாக அறிந்து கொண்டோம். இருப்பினும் அவருடைய யாப்பியல் குறித்த சிந்தனையில் சில முரணனான இடங்களும் உள்ளன. காவிய காலம் நூலில் பாரத வெண்பாச் செய்யுட்கள் பற்றிக் குறிப்பிடும்போது வையாபுரிப்பிள்ளை, பாரத வெண்பாவில் வருஞ்செய்யுட்கள் கட்டுரைச் செறிவின்றியுள்ளன. வெண்பாவிற்குத் தனித்துரிய செப்பலோசை பல இடங்களில் பிறழ்ந்து வருகின்றன. உதாரணமாக, ஈற்றுச் சீரொழிய ஏனையவை காய்ச்சீரால் அமைந்த வெண்பாக்களைக் கூறலாம் என்று சுட்டிகாட்டி ஒரு செய்யுளினை எடுத்துக்காட்டியுள்ளார்.
                        மின்பயிலு மாமணிப்பூண் வேல்வேந்தர் தந்திறையை
                        முன்பொழுதே யந்தணர்க்கு முற்றுவித்தும் - பின்பொழுது
                        நேரிழையாள் தன்னொடு நேயமுடன் மெய்ச்சூதின்
                        போரடையத் தானடைந்தான் புக்கு

என்ற வெண்பாவில் பயின்றுவந்துள்ள ஓசை கலிப்பாவிற்குரிய ஓசையாகும். பிற்காலத்தார் இங்ஙனம் கலியோசையை வெண்பாவிற்கு ஊட்டிச் செய்யுளை நெகிழச் செய்து வெண்பாவின் ஓசையினிமையைச் சிதைத்துவிட்டனர் (காவிய காலம், 1991:212)
என்று கருத்துரைக்கிறார். மேற்குறிப்பிட்ட நான்மணிக்கடிகைப் பதிப்பின் மூலம் வெண்பாவில் சிறந்த பயிற்சியுடையவராகத் தன்னை வெளிப்படுத்திய வையாபுரிப்பிள்ளை இங்கு வெண்சீர் வெண்டளையால் அமைந்து செப்பலோசை சிறிதும் பிறழாமல் வந்துள்ள வெண்பாவில் கலித்தளையும் கலியோசையும் விரவி வருவதாகக் குறிப்பிடுவது முரணனாக அமைந்திருக்கிறது.
புதுமைபித்தன் குறித்து குறிப்பிடும் போதும் அவர் எழுதியதாக இரண்டு வெண்பாக்களைக் குறிப்பிடுகிறார். அதில் ஒன்று வருமாறு,
அல்வா எனச்சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வாநீ தப்ப
முடியாதே - அல்வா
விருது நகர்கெடியில்
வருதுஎன காத்திருப்பேன்
நான்

இந்தச் செய்யுட்களைப் பார்த்த அளவில் இவை பண்டையச் செய்யுள் இலக்கணத்திற்கு மாறாக உள்ளன என்பது எளிதில் புலப்படும். சீர், தளை, மோனை முதலியன இலக்கணங்களிற் கூறியபடி அமையவில்லை (தமிழ்ச் சுடர்மணிகள், 1991:299-300)
என்று வையாபுரிப்பிள்ளை கூறுகிறார். இறையனார் அகப்பொருள் உரையில் வசனமாக அமைந்த வெண்பாவினை அடையாளம் கண்டுகொண்ட வையாபுரிப்பிள்ளை இங்குப் பார்ப்பதற்கு மட்டும் புதுக்கவிதை வடிவமாகத் தோற்றம் கொண்ட மேற்குறிப்பிட்ட செய்யுள் வெண்பாவின் இலக்கணத்தில் சரிவர அமைந்துள்ளது. புதுமைபித்தன் எழுதிய வெண்பாவின் சரியான வடிவம்,
அல்வா எனச்சொல்லி அங்கோடி விட்டாலும்
செல்வாநீ தப்ப முடியாதே - அல்வா
விருது நகர்கெடியில் உன்னுடனே கட்டாயம்
வருதென காத்திருப்பேன் நான்.

இவ்வாறு மாற்றியமைக்கும் வெண்பாவில் ஓரிடத்தில் மட்டும் தளைதட்டுகிறது. கட்டாயம்என்ற காய்ச்சீர் முன் வருதெனஎன்ற நிரை நின்று கலித்தளையாகிறது.  ஆனால் வையாபுரிப்பிள்ளை, புதுமைபித்தன் வேண்டுமென்றே இலக்கணத்தைக் கைவிட்டு நூதன முறையைப் பின்பற்றியிருப்பதாகக் கூறுவதன் மூலம் புதுமையை விரும்புபவராகப் புதுமைபித்தனை அடையாளப்படுத்தும் முயற்சியில் வையாபுரிப்பிள்ளை ஈடுபட்டுள்ளார் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.
            வையாபுரிப்பிள்ளையின் யாப்பியல் சிந்தனை குறித்து இதுகாறும் கூறியுள்ள செய்திகளின் தொகுப்பாக
·         வையாபுரிப்பிள்ளை யாப்பு என்ற சொல்லுக்குத் தமிழ் பேரகராதியில் தந்த செறிவான பொருள் குறிப்பிடத்தக்கது.
·         யாப்பியல் ஆய்வின் பயன்களில் பாடவேறுபாடுகளைக் கண்டறிதல், பா வடிவங்களை இனங்காணுதல் ஆகிய இரண்டினையும் தமது ஆராய்ச்சியில் பயன்படுத்தியுள்ளார்.
·         கால ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் வையாபுரிப்பிள்ளை தமிழ் பா வடிவங்களுக்கும் கால ஆராய்ச்சி செய்து முடிபுகளைக் கூறியுள்ளார்.
·         காலந்தோறும் சிறந்து விளங்கும் பா வடிவங்கள் குறித்தும், அதன் சிறப்பு கூறுகளை எடுத்துரைத்தும் விளக்கியுள்ளார்.
·         பாவினமான காப்பியக் கலித்துறை, கட்டளைக் கலித்துறை முதலியவற்றைக் குறித்து வரலாற்று நிலையில் ஆராய்ந்துள்ளார்.
·         ஒப்பிலக்கிய ஆராய்ச்சியின் மூலம் தமிழ் மொழியின் தொல்லிலக்கியமான சங்க இலக்கியத்தின் வடிவம் தமிழுக்கே உரியது என்பதை எடுத்துரைத்துள்ளார்.




No comments: